பஸ் கட்டண உயர்வை கண்டித்து பயணிகளிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்த மாணவி

சேலத்தில், பஸ் கட்டண உயர்வை கண்டித்து பயணிகளிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்த மாணவி வளர்மதி

Update: 2018-02-01 22:45 GMT
சேலம்,

சேலம் அருகே வீராணம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து வரும் இவர், சமீபத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகக்கூறி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து குண்டர் சட்டத்தில் இருந்து மாணவி வளர்மதி விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நேற்று இரவு சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்த பயணிகளிடம் மாணவி வளர்மதி துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தார். தொடர்ந்து ஒவ்வொரு பஸ்சாக ஏறிய அவர், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற அரசை வலியுறுத்த வேண்டும் என்று பயணிகளை கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் சார்பில் வினியோகம் செய்த துண்டு பிரசுரத்தில் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. 

மேலும் செய்திகள்