ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு தேர்வு: என்ஜினீயர்கள், பட்டதாரிகள் குவிந்தனர்

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நடந்த தேர்வில் என்ஜினீயர்கள், பட்டதாரிகள் குவிந்தனர். வருகிற 10-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

Update: 2018-02-01 22:45 GMT
சேலம்,

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதியுடன் விண்ணப்பிக்க கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மொத்த காலிப்பணியிடங்கள் 1,074 ஆகும். அவற்றில் சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன்கடைகளில் விற்பனையாளர் பணிக்கு மட்டும் 115 பணியிடங்கள் காலியாக இருந்தன. கல்வி தகுதி பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல கட்டுனர் பணிக்கு 22 இடங்கள் காலியாக உள்ளன. அதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி ஆகும். வயது வரம்பு 18 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தகுதி ஆனவர்கள்.

மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 17 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுக்கு நேரடி தேர்வுக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பிற்காக 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

சேலம் அழகாபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாய கூடத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது. இதனை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறையின் அதிகாரிகள் சான்றிதழ் சரிபார்க்கும் பணியினை நடத்தினர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 1,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை 2-ம் கட்டமாக 1,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய கூடத்தில் 40 மேஜைகள் போடப்பட்டு, ஒரு மேஜைக்கு தலா 3 பேர் வீதம் அமர்ந்து 120 பேர் இந்த பணியினை மேற்கொண்டனர். கல்வித்தகுதி பிளஸ்-2, பத்தாம் வகுப்பு என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் வேலைவாய்ப்பு இன்றி உள்ள என்ஜினீயர்கள், முதுகலை பட்டதாரிகள் என பட்டப்படிப்பு முடித்தவர்களே ஏராளமானவர்கள் வந்திருந்தனர். சில பெண்கள் தங்களது கைக்குழந்தை மற்றும் கணவர், பெற்றோர்களுடன் வந்திருந்ததையும் காணமுடிந்தது.

தொடர்ந்து வருகிற 10-ந் தேதிவரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத் தெரிவித்தார். ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் ஓராண்டுக்கு வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பணி நிரந்தரம் செய்யப்பட்டு மாதம் ரூ.11 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்