விளம்பர பேனரை அகற்றக்கோரி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

கும்பகோணத்தில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் வைத்த பேனரை அகற்றக்கோரி வியாபாரிகள் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

Update: 2018-02-01 22:30 GMT
கும்பகோணம்,

கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் பகுதியில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை திருவிடைமருதூர் தொகுதிக்கும், நாளை(சனிக்கிழமை) கும்பகோணம் தொகுதிக்கும் வருகிறார்.

டி.டி.வி. தினகரனை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள கடைகளின் முன்பு விளம்பர பேனர்கள் வைத்திருந்தனர். இதனால் கடைகளின் முகப்பு தெரியவில்லை. இது குறித்து வியாபாரிகள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் விளம்பர பேனர்கள் அகற்றப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள், நேற்று மாலை உச்சிபிள்ளையார் கோவில் மைய பகுதியில் குவிந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பின்னர் அந்த பகுதியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தனர். மேலும் பேனரை அகற்றும் வரை கடைகளை திறப்பதில்லை என அறிவித்தனர்.

அகற்றினர்

இது குறித்து தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன், ரமேஷ்குமார் மற்றும் போலீசார் வந்து போராட்டம் செய்ய முயன்ற வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விளம்பர பேனர்களை உடனடியாக அகற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அறிவித்தனர். இந்தநிலையில் தினகரன்அணி ஆதரவாளர்கள் அப்பகுதிக்கு வந்து கும்பகோணத்தில் உள்ள அனைத்து விளம்பர பேனர்களையும் அகற்ற வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அப்பகுதியில் இருந்த விளம்பர பேனர்கள் அனைத்தையும் போலீசார் அகற்றினர். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் தங்களது கடைகளை திறந்தனர். இந்த சம்பவத்தால் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் பதற்றம் நிலவியது.

மேலும் செய்திகள்