தூத்துக்குடி அருகே உடல் தீவைத்து எரிப்பு: 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற சிறுவன் கைது

தூத்துக்குடி அருகே 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று உடலை தீவைத்து எரித்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-01 21:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று உடலை தீவைத்து எரித்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

5 வயது சிறுமி


தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள கீழதட்டப்பாறை பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் உள்ளார். இவருடைய மனைவி ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் 2 மகன்கள், 5 வயதில் ஒரு மகள். இவர்களில் 2 மகன்களும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். மகள் அங்குள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று வந்தாள்.

சிறுமி மதியம் 3 மணிக்கு மேல் அங்கன்வாடியில் இருந்து வீட்டுக்கு வருவது வழக்கம். அந்த நேரத்தில் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் அவள் மட்டும் வீட்டில் தனியாக இருப்பாள்.

எரிந்த நிலையில் பிணம்

நேற்று முன்தினம் மாலையில் சிறுமியின் வீடு தீப்பிடித்து எரிவதாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஊர்மக்களிடம் கூறினான். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் தட்டப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது வீட்டுக்குள் பாதி உடல் எரிந்த நிலையில் அந்த சிறுமி பிணமாக கிடந்தாள். உடனடியாக போலீசார் அவளது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்


இந்த சம்பவம் குறித்து தட்டப் பாறை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீடு தீப்பிடித்த தாக கூறிய சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அவன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தான். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

பாலியல் பலாத்காரம்

நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் அங்கன்வாடியில் இருந்து வீட்டுக்கு வந்த அந்த சிறுமி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த இந்த 14 வயது சிறுவனும், மற்றொரு சிறுவனும் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தனர். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை பார்த்த 14 வயது சிறுவன், நைசாக சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து உள்ளான். அங்கு சிறுமியுடன் பேசிக் கொண்டு இருந்தான். பின்னர் வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தான்.

அப்போது சிறுமி சத்தம் போட்டதால் ஆத்திரம் அடைந்த அவன் அருகில் கிடந்த துண்டால் சிறுமியின் கழுத்தை இறுக்கினான். பின்னர் சிறுமியின் காலை பிடித்து தூக்கி தரையில் அடித்தான். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

கைது

பின்னர் அந்த சிறுவன், கொலையை மறைக்க நினைத்தான். இதற்காக, வீட்டில் இருந்த சில துணிகளை எடுத்து சிறுமியின் உடல் மீது போட்டு, சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை எடுத்து ஊற்றி தீ வைத்து கொளுத்தினான். பின்னர் தன் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக, எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு வெளியே வந்து, அந்த பகுதியில் உள்ள மக்களிடம் வீடு தீப்பிடித்து எரிகிறது என்று கூறி நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதைத்தொடர்ந்து தட்டப்பாறை போலீசார் சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றி, 14 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர். கொலையுண்ட சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 5 வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்