குடியாத்தம் மோர்தானா அணையில் குதித்து மகன், மகளுடன் வியாபாரி தற்கொலை

குடும்ப தகராறு காரணமாக குடியாத்தம் மோர்தானா அணையில் குதித்து மகன், மகளுடன் காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-02-01 23:15 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் கே.கே.நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ஜீவா (வயது 40). இவருக்கும் ஆம்பூர் ஏ.கஸ்பாவை சேர்ந்த ஹேமாவதி (32) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கெஜலட்சுமி (12) என்ற மகளும், ராஜேஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

குடியாத்தத்தில் உள்ள ஒரு பள்ளியில் கெஜலட்சுமி 7-ம் வகுப்பும், ராஜேஷ் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஜீவா காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக ஜீவாவுக்கும், அவரது மனைவி ஹேமாவதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீவாவும், மகன் ராஜேசும் திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்து வந்தனர்.

மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஹேமாவதி கோபித்து கொண்டு ஆம்பூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மகனும், மகளும் தந்தையுடன் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் காலை ஜீவா தன் வீட்டின் அருகே உள்ள பெற்றோரிடம் மகன், மகளை பள்ளியில் விட்டு வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். மதிய வேளையில் ஜீவா வீட்டுக்கு வராததால் அவரது செல்போனிற்கு போன் செய்தபோது தொடர்பு எல்லைக்கு வெளியே காட்டி உள்ளது. மாலையில் பள்ளியில் இருந்து கெஜலட்சுமி, ராஜேஷ் ஆகியோர் வீட்டிற்கு வராததால் ஜீவாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தபோது அவர்கள் பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதனையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தபோது எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் மோர்தானா அணை பகுதியில் மாடு மேய்த்துவிட்டு கிராமமக்கள் வந்தபோது மோட்டார்சைக்கிளும், புத்தகப்பைகளும், செருப்புகளும் இருந்தது. இதுகுறித்து உடனடியாக கிராமமக்கள் பையில் இருந்த பள்ளி அடையாள அட்டையில் இருந்த முகவரி குறித்து குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு உத்தரவின்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட முகவரிக்கு சென்று விசாரித்தபோது ஜீவாவும், அவரது பிள்ளைகளும் காணாமல்போனது தெரியவந்தது. உடனடியாக உறவினர்களும், காவல்துறையினரும் அணை பகுதிக்கு சென்றபோது இரவு நேரம் என்பதால் எதுவும் தெரியவில்லை.

நேற்று காலை குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசி, தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் ஜீவாவின் உறவினர்கள் மோர்தானா அணை பகுதிக்கு சென்று தேடினர். மதியம் சுமார் 12 மணி அளவில் கெஜலட்சுமி மற்றும் ராஜேசின் உடல்கள் அணையில் மிதந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் சிதம்பரம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அணையில் இருந்து உடல்களை மீட்டனர். தொடர்ந்து அணையில் தேடி ஜீவாவின் உடலையும் மீட்டனர். மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக ஜீவா மகன், மகளுடன் மோர்தானா அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை மகன், மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடியாத்தத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்