கோவில்பட்டியில் பயங்கரம்: கடத்தப்பட்ட நகைக்கடை அதிபர், தலையில் கல்லைப்போட்டு கொலை

கடத்தப்பட்ட நகைக்கடை அதிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார். அவரது பிணம் ஓடை அருகே வீசப்பட்டது.

Update: 2018-02-01 21:30 GMT

கோவில்பட்டி,

கடத்தப்பட்ட நகைக்கடை அதிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார். அவரது பிணம் ஓடை அருகே வீசப்பட்டது.

கோவில்பட்டியில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

நகைக்கடை அதிபர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 4–வது தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் என்ற செந்தில் (வயது 40). இவர் கோவில்பட்டி தெற்கு பஜாரில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஞானதேவி (33). இவர்களுக்கு ஞானரோ‌ஷன் (11) என்ற மகனும், தேஜாஸ்ரீ (4) என்ற மகளும் உள்ளனர். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஞானரோ‌ஷன் 6–ம் வகுப்பும், தேஜாஸ்ரீ எல்.கே.ஜி.யும் படித்து வருகின்றனர்.

கடந்த 30–ந் தேதி இரவில் செந்தில் தனது நகைக்கடையில் இருந்தவாறு, தன்னுடைய மனைவியிடம் செல்போனில் பேசினார். அப்போது அவர் சிறிதுநேரத்தில் நகைக்கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு வருவதாகவும், வீட்டுக்கு தேவையான பொருட்கள் ஏதேனும் வாங்க வேண்டுமா? என்றும் கேட்டார். பின்னர் செந்தில் வீட்டுக்கு செல்லாமல் மாயமானார்.

தலையில் கல்லைப்போட்டு கொலை

நேற்று முன்தினம் காலையில் ஞானதேவி தன்னுடைய கணவரின் நகைக்கடைக்கு சென்றபோது, அங்கு ஒரு கதவு மட்டும் பூட்டி இருந்தது. மற்றொரு கதவு பூட்டப்படாமல் இருந்தது. ஆனால் அங்கு செந்தில் இல்லை. எனவே, ஞானதேவி தன்னுடைய கணவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் கோவில்பட்டி–குருமலை ரோட்டில் கெச்சிலாபுரம் விலக்கு அருகில் தரைமட்ட தாம்போதி பாலத்தின் ஓடை அருகில் காட்டு பகுதியில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு கொலை செய்யப்பட்ட நபர், கடத்தப்பட்ட நகைக்கடை அதிபர் செந்தில் என்பது தெரியவந்தது. தொடர்ந்து செந்திலின் குடும்பத்தினரையும் போலீசார் வரவழைத்து, கொலை செய்யப்பட்டது செந்தில் என்பதை உறுதி செய்தனர். பின்னர் செந்திலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து செந்தில் மாயமான வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். நகை அடமானம் பிடித்ததில் ஏற்பட்ட தகராறில் செந்தில் கடத்தி கொலை செய்யப்பட்டாரா?, பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா?, தொழில் போட்டி காரணமாக அவரை யாரேனும் கடத்தி சென்று கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடை அதிபரை கடத்தி சென்று, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்