திருக்கடையூரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்த போலி டாக்டர் கைது

திருக்கடையூரில், ஆஸ்பத்திரி நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். இவர், மீண்டும் சிக்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2018-02-01 23:00 GMT
திருக்கடையூர்,

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் அறிவுறுத்தலின்படி மாவட்ட தேசிய சுகாதார துறை இணை இயக்குனர் மகேந்திரன் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள போலி டாக்டர்களை கண்டறிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அதன்படி மருத்துவக்குழுவினர் மாவட்ட முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மருத்துவ குழுவினருக்கு திருக்கடையூர் மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மருத்துவக்குழுவை சேர்ந்த டாக்டர்கள் ராஜா, விஜயபாஸ்கர் ஆகியோர் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஆஸ்பத்திரி நடத்தி வந்த நடராஜன், டாக்டருக்கு படிக்காமலேயே தான் ஒரு டாக்டர் என்று கூறிக்கொண்டு பொதுமக்களுக்கு பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்ததும், அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

அவர் நடத்தி வந்த ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கான 4 படுக்கைகள் கொண்ட அறைகள் இருந்தன. அங்கு இருந்த ஊசி, மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவ குழுவினர் கைப்பற்றி பொறையாறு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், வனிதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நடராஜனை (வயது 45) கைது செய்தனர்.

தற்போது கைதான நடராஜன், ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு மருத்துவக்குழு ஆய்வின்போது போலி டாக்டர் என்று கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இவர் மீண்டும் திருக்கடையூரில் ஆஸ்பத்திரி வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார் என்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் செய்திகள்