பிவண்டியில், பயங்கர தீ விபத்து 23 குடோன்கள் எரிந்து நாசம்

பிவண்டியில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 குடோன்கள் எரிந்து நாசமாகின.

Update: 2018-02-01 05:28 GMT
தானே,

தானே மாவட்டம் பிவண்டி காயத்திரி நகரில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டு உள்ள குடோன்கள் உள்ளன. நேற்று இங்குள்ள ஒரு குடோனில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென மற்ற குடோன்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் பிவண்டி, கல்யாண், உல்லாஸ்நகர் பகுதியை சேர்ந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வாகனங்களில் விரைந்து வந்தனர்.

பின்னர் நாலாபுறமும் சுற்றி நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் அங்குள்ள 23 குடோன்கள் மற்றும் அவற்றில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் அங்குள்ள 6 குடிசைகளும் தீயில் எரிந்து சாம்பலானது.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்