தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி

கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கு மட்டுமே இருப்பு உள்ளதால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்தார்.

Update: 2018-02-01 04:52 GMT
பெங்களூரு,

காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே பல்லாண்டு காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம், தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று இறுதி தீர்ப்பு அளித்தது. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி ஆகும்.) 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீரை விடுவிப்பதும் இல்லை; தமிழக அரசு பல முறை வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் மத்திய அரசு அமைக்காமல் இழுத்தடித்து வருகிறது.

இதற்கிடையே காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சம்பாப்பயிரை பயிரிட்டு விட்டு, தண்ணீர் இல்லாமல் கண்ணீரில் தத்தளிக்கின்றனர். மொத்தம் உள்ள சுமார் 25 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையில் உள்ளன. இந்தப் பயிர்களை காப்பாற்ற வேண்டுமானால் தண்ணீர் உடனடியாக தேவைப்படு கிறது. இது தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்திக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்கும்படி கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த நிலையில் பெங்களூரு விதானசவுதாவில் நேற்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசுவதற்காக, நேரம் ஒதுக்கும்படியும் அவர் கர்நாடக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவது குறித்து, முதல்-மந்திரி சித்தராமையா தான் முடிவு எடுப்பார். அதுபற்றி நான் எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது. தமிழக முதல்-அமைச்சர், சம்பா பயிர்களை காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி கேட்டு உள்ளார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் போதிய தண்ணீர் இல்லை. அணைகளில் இருப்புள்ள தண்ணீரை வருகிற ஜூன் மாதம் வரை பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடி நீருக்கு பயன்படுத்த வேண்டிய நிலை நமக்கு இருக்கிறது. அணைகளில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. அதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாத கஷ்டமான நிலையில் கர்நாடகம் இருக்கிறது. எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது என்பது சாத்தியமில்லை. அதுவும் விவசாய பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட முடியாத நிலை கர்நாடகத்தில் உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர், பெங்களூருவுக்கு வந்து முதல்-மந்திரி சித்தராமையாவுடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார். அவரிடம் காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை பற்றியும், இங்கு நிலவும் சூழ்நிலை பற்றியும் தெளிவாக எடுத்த கூறப்படும். அதன்பிறகு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா தான் இறுதி முடிவு எடுப்பார்.

மகதாயி நதிநீர் பிரச்சினையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, எடியூரப்பா, கோவா மாநில முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் நாடகமாடுகிறார்கள். முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதாமல், எடியூரப்பாவுக்கு மனோகர் பாரிக்கர் கடிதம் எழுதியதே தவறானது. கர்நாடக எல்லையில் கனகும்பியில் கோவா சபாநாயகர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியது விதிமீறல் ஆகும். மகதாயி பிரச்சினையில் கர்நாடகம் எந்த ஒரு விதிமுறைகளையும் மீறவில்லை.”

இவ்வாறு மந்திரி எம்.பி. பட்டீல் கூறினார்.

மேலும் செய்திகள்