ஆவணங்கள் இருந்தாலும் அபராதம்: அதிகார வரம்பை மீறும் போலீஸ் அதிகாரிகள்

தமிழகத்தில் சமீப காலமாகவே போலீசார் தங்களது விதிமுறை மற்றும் அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்.

Update: 2018-02-01 03:15 GMT
மதகுபட்டி,

தமிழகத்தில் சமீப காலமாகவே போலீசார் தங்களது விதிமுறை மற்றும் அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டு வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 2 ஆண்டுகளில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டு திருப்பூரில் மது ஒழிப்பிற்காக போராட்டம் நடத்திய பெண்ணை போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கினார். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோன்று பல்வேறு இடங்களில் போலீசார் தங்களது அதிகார வரம்பை மீறி செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சென்னையில் போலீசார் தாக்கியதால் கால்டாக்சி டிரைவர் மணிகண்டன் என்பவர் விரக்தியடைந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவமும் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தங்களது ஆதாயத்தை தேட நினைப்பதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாகின்றன என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக கையில் அசல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு லைசென்ஸ் வாங்காதவர்களில் பெரும்பாலானோர் தற்போது லைசென்ஸ் பெற்று வாகனங்கள் ஓட்டுகின்றனர். மேலும் போலீசார் கெடுபிடியால் இன்சூரன்ஸ், ஆர்.சி. புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்று வருகின்றனர். அதனையும் கையில் வைத்தே வாகனத்தை ஓட்டி வருகின்றனர். கிராமப்புற மக்களும் அதில் கவனம் செலுத்தி ஆவணங்களை வாகனங்களில் வைத்தே ஓட்டி வருகின்றனர். நெடுஞ்சாலைகளிலும், கிராமப்புற சாலைகளிலும் நிற்கும் போலீசார் சோதனையின்போது ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். ஓராண்டில் போலீசாரின் தொடர் சோதனையால் ஹெல்மெட், ஆவணங்களை வாகன ஓட்டிகள் வைத்திருப்பதால் விபத்துகள் குறைந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. அந்த அளவிற்கு 50 சதவீத சாலை விபத்துகள் மாநிலத்தில் குறைந்துள்ளன.

ஆனால் தற்போது சோதனை என்ற பெயரில் போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களுக்கு வழக்கு தேவைப்படுகிறது என்ற காரணத்திற்காக அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் அதிகாரத்தை பயன்படுத்தி அதிவேகமாக வந்ததாகவும், சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறியும் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர். பல போலீஸ் அதிகாரிகள் அபராதம் விதிக்காமல் தங்களது ஆதாயத்தை இதில் தேடி கொள்கின்றனர். அவ்வாறு கொடுக்க மறுக்கும் நபர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தாக்குகின்றனர். மேலும் லைசென்ஸ் ரத்து செய்வதாகவும் மிரட்டுகின்றனர். மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் இதுபோன்ற அதிகார வரம்பை மீறி செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.

வாகன ஓட்டி ஒருவரிடம் ஆவணம் இல்லை என்றால், அவரை சோதனையிட்டால் தெரிந்துவிடும். அதேபோல் ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்தாலும், தற்போது போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள நவீன கருவியை வைத்து கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அதிவேகத்தில் வாகனம் ஓட்டி வருகிறார்கள் என்பதை யாரும் விளக்கம் தரமுடியாது. அதற்கான கருவியும் கிடையாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே போலீசார் அதிவேகம் என்று வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர். குறிப்பாக இளம் வயதினர் யாராக இருந்தாலும் அதிவேகத்தில் வந்ததாக வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். தற்போது ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் இத்தனை போக்குவரத்து வழக்கு பதிவு செய்து, பணம் வசூலிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் ஆணையிடுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இது உண்மை என்றாலும், மக்கள் மத்தியில் போலீசார் அனைவரும் சட்ட விதிமுறையை மீறி செயல்படுவதாக இது பார்க்கப்படுகிறது.

ஆவணங்கள் சரிபார்த்தல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவற்றை உறுதி செய்வது போன்று அதிவேகத்திற்கும், சீட் பெல்ட் அணிவதற்கும் ஒரு முடிவை கோர்ட்டு வழங்க வேண்டும். தற்போது மின்வாரியத்தில் மின் மீட்டரில் நுகர்வோர் ஒரு தடவை எவ்வளவு அதிகபட்ச வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளார் என்பதை கண்டுபிடிக்க மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புதியதாக தயாரிக்கப்படும் அனைத்து இரு, நான்கு சக்கர வாகனங்களிலும் எந்த தேதியில், எந்த நேரத்தில் அந்த வாகனம் அதிகபட்ச வேகத்தில் சென்றது என்பதை கண்டறிய டிஜிட்டர் மீட்டர்கள் பொருத்தினால் தான் இதற்கு ஓரளவு தீர்வு காணலாம். அப்போது தான் அதிவேகம் என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுபடும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க இயலும். மேலும் வாகன ஓட்டிகளை மிரட்டி ஆதாயம் தேடும் போலீசார் மீது அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்