மண்சரிவு ஏற்பட்டதாக கருதி பயந்தோம்; கடவுளின் கருணையால் 5 பேரும் உயிர் தப்பினோம், பெண் பேட்டி
மண்சரிவு ஏற்பட்டதாக கருதி பயந்தோம். கடவுளின் கருணையால் 5 பேரும் உயிர் தப்பினோம் என்று பெண் கூறினார்.
ஊட்டி-குன்னூர் சாலையில் வந்து கொண்டிருந்த லாரி திடீரென 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பாரதிநகரில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதுகுறித்து சம்பவம் நடந்தபோது அந்த வீட்டில் இருந்த பாக்கியம் (45) கூறியதாவது:-
வீட்டில் நான், எனது மருமகள் விமலா (26) மற்றும் குழந்தைகள் 3 பேர் இருந்தோம். நேற்று முன்தினம் இரவு பட்டாசு வெடிப்பது போன்று சட, சட என்று சத்தம் கேட்டது. பின்னர் மண் சரிவு ஏற்படுவது போன்று தோன்றியது. உடனே நான் எனது மருமகள் மற்றும் 3 குழந்தைகளை வெளியே வரும்படி அழைத்தேன். இதனை கேட்டு சமையல் அறையில் இருந்த விமலா வீட்டின் நடுப்பகுதிக்கு வந்தார். அதேபோல் குழந்தைகளும் வீட்டின் நடுஅறைக்கு வந்தனர். அப்போது திடீரென டமார் என்று பெரிய சத்தம் கேட்டது. உடனே நாங்கள் 5 பேரும் அதிர்ச்சி அடைந்தோம்.
பயத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதன் பின்னர் தான் வீட்டில் லாரி விழுந்தது தெரியும். உடனே கதவை திறந்து கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று வெளியே ஓடி வந்தோம். இதில் 7-ம் வகுப்பு படித்து வரும் ராகேசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவனுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எங்களுக்கு அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறினர். லாரி விழுந்ததில் 2 படுக்கை அறைகள், சமையல் அறை மற்றும் கழிப்பறை முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. மேலும் ஆங்காங்கே சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் வீடு இல்லாமல் தவித்து வருகிறோம். நிலைகுலைந்த எங்களது வீட்டை கட்ட அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.