திருப்பூரில் அடுத்த ஆண்டுக்குள் அருங்காட்சியகம் அமைக்கப்படும், அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

திருப்பூரில் அடுத்த ஆண்டுக்குள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

Update: 2018-02-01 02:35 GMT
திருப்பூர்,

திருப்பூர் பின்னல் புக்டிரஸ்ட்-பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா திருப்பூரில் உள்ள காங்கேயம் சாலை பத்மினி கார்டனில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தமிழ் சங்க வெள்ளிவிழா ஆண்டு மற்றும் இலக்கிய விருதுகள் பரிசளிப்பு விழா புத்தக திருவிழா வளாகத்தில் நேற்று நடந்தது.

திருப்பூர் தமிழ்சங்கத்தின் தலைவர் முருகநாதன் தலைமை தாங்கினார். தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், கரைப்புதூர்நடராஜன், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் தமிழ்சங்கம் உன்னத பணியை செய்து வருகிறது. புத்தக கண்காட்சிக்கு ஆர்வத்துடன் அனைவரும் வந்துள்ளனர். யுனஸ்கோ அமைப்பு சென்னை நகரத்தை இசைநகரமாக அங்கீகாரம் தந்துள்ளது. 28 நாட்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக்கச்சேரிகள் நடக்கும் இடம் சென்னை நகரம் தான். இசை மரபாக ஊற்றெடுக்கும் நகரமாக சென்னை உள்ளது. தமிழகம் என்று அண்ணா அறிவித்து 50 ஆண்டுகள் ஆகிறது. இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, மொழி, கலை, பண்பாடு ஆகிய மூன்றும் உன்னத நிலையை அடையக்கூடிய ஆண்டாக இது இருக்கும். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தனித்தன்மையை நாம் மீட்டெடுப்போம். இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமித்துள்ளோம். அதனையும் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக மாற்றுவோம்.

ஒரு குடையின் கீழ் உலகத்தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்து பழந்தமிழர் பண்பாட்டு கண்காட்சியை அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இன்றைக்கு உலகம் முழுவதும் 9 கோடியே 50 லட்சம் பேர் தமிழினத்தை சேர்ந்தவர்கள் உள்ளோம். சீனா நாட்டை சேர்ந்த மாண்டரின் மொழியும், தமிழ் மொழியும் அதிகம் பேர் பேசுகிறார்கள்.

தந்தை பெரியார் தமிழை எளிமைப்படுத்தினார். அதேபோல் தமிழை அடுத்த தலைமுறைக்கு தமிழ்வளர்மையம் மூலம் எடுத்து செல்ல உள்ளோம். தமிழர்கள் ஒரு லட்சம் பேர் உள்ள 17 நாடுகளில் தமிழ்கற்றுத்தர ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இணையதளம் மூலமாக அடிப்படையான கற்றலை ஏற்படுத்த இருக்கிறோம். இதனை தமிழ்வளர்மையம் செய்யும். முதல்கட்டமாக 5 மாநிலங்களில் கொண்டு செல்ல உள்ளோம். காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பிறமாநிலங்களும் தமிழ் சொல்லித்தர புரிந்துணர்வு ஒப்பந்தம் போட உள்ளோம். ஒவ்வொரு மாதமும் இளமை குன்றாமல் தமிழ் இருக்க, பல்வேறு துறைகளில் உள்ள சொற்களுக்கு புதிய தமிழ் சொற்களை உருவாக்க உள்ளோம். தற்போது ஸ்மார்ட் கார்டை அதே வார்த்தையில் தான் இன்றும் கூறுகிறோம். இது போன்ற சொற்களை தமிழ்ப்படுத்தும் பணி அனைத்துதுறைகளிலும் நடைபெறும்.

தமிழகத்தில் 36 அருங்காட்சியகங்கள் உள்ளன. விலைமதிப்பற்ற தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் மாநிலமும் தமிழகமும் தான். கிடைப்பதை எல்லாம் கொண்டு 36 அருங்காட்சியகங்களை உலகத் தரத்தில் மாற்றுவோம். திருப்பூர் உட்பட அருங்காட்சியகம் இல்லாத மாவட்டங்களில் அடுத்த ஆண்டுக்குள் அருங்காட்சியகம் அமைப்போம். நடப்பாண்டில் தமிழகம் என்று அறிவித்ததற்கான பொன்விழா ஆண்டு என்று சொல்லாமல் தமிழரின் பொன்விழாவாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் சங்கத்தின் செயலாளர் அ.லோகநாதன், பொருளாளர் கு.முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். 

மேலும் செய்திகள்