நட்சத்திர ஓட்டலில் கொலை சதி ஆலோசனை: மர்டர் மணிகண்டனின் மகனுக்கு வலைவீச்சு

நட்சத்திர ஓட்டலில் ரவுடிகள் கொலை சதி குறித்து ஆலோசனை நடத்திய விவகாரத்தில் தலைமறைவான மர்டர் மணிகண்டனின் மகனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2018-02-01 03:00 GMT
புதுச்சேரி,

காரைக்காலை அடுத்துள்ள திரு-பட்டினம் மலையான் தெருவை சேர்ந்தவர் ராமு. சாராய வியாபாரி. இவருக்கு 2 மனைவிகள். 2-வது மனைவி எழிலரசியுடன் ராமு குடும்பம் நடத்தி வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்து ராமுவையும் எழிலரசியையும் கொலை செய்ய முதல் மனைவியான வினோதா திட்டமிட்டார். இதற்காக அவரால் கூலிப்படை கடந்த 11.1.2013 ராமு, எழிலரசி ஆகியோரை வெட்டியது. இதில் ராமு கொலை செய்யப்பட்டார். எழிலரசி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இதைத்தொடர்ந்து கணவர் ராமு கொலையில் தொடர்புடையவர்களை கொலை செய்ய எழிலரசி சபதம் எடுத்தார். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு சீர்காழி அருகே காரில் சென்ற போது வினோதா வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராமுவின் கொலையில் முக்கிய குற்றவாளிகளான அய்யப்பன், வைத்தி ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த 3.1.2017 அன்று தனது திருமண மண்டபத்தை பார்க்க வந்த முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

ராமுவின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த தொடர் கொலைகள் அரங்கேறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எழிலரசி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குகள் உள்ளன. சிவக்குமார் கொலையிலும் எழிலரசி கைதாகி 10 மாதங்களுக்கு பின் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் சிறையில் இருந்த போது பிரபல ரவுடி மர்டர் மணிகண்டனை சந்தித்து பேசியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பெண் தாதா எழிலரசி மற்றும் 30 ரவுடிகள் கூடி ராமுவின் கொலையில் முக்கிய குற்றவாளியான அவரது முதல் மனைவி வினோதாவின் தங்கை கணவர் ஆனந்தை கொலை செய்வது குறித்து அவர்கள் அங்கு ஆலோசனை நடத்துவது தொடர்பாக உடனே போலீசார் தகவல் வந்தது.

அதைத்தொடர்ந்து உஷாரான போலீசார் ஓட்டலை சுற்றி வளைத்து எழிலரசி உள்பட 14 ரவுடிகளை கைது செய்தனர். இதன்மூலம் அவர்களது சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கொலை வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள எழிலரசி கோர்ட்டு விதிகளை மீறி செயல்படுவதாக அறிக்கை தாக்கல் செய்து அவரது ஜாமீனை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே எழிலரசியின் ஜாமீன் ரத்தாகும் என தெரிகிறது.

இதற்கிடையே எழிலரசி நட்சத்திர ஓட்டலில் இருந்து தப்பிச்சென்ற மர்டர் மணிகண்டனின் மகன் டேவிட், முக்கிய கூட்டாளியான பெத்துச்செட்பேட் ஏழுமலை (44) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான நாவற்குளம் மாட்டுக்காரன்சாவடியில் தனியாக உள்ள ஒரு வீட்டில் ஏழுமலை பதுங்கி இருப்பது போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த வீட்டில் பதுங்கி இருந்த ஏழுமலையை கைது செய்தனர். அவரிடம் இருந்து கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். அதையடுத்து அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

தலைமறைவான மர்டர் மணிகண்டனின் மகன் டேவிட் என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-

எழிலரசியுடன் நட்சத்திர ஓட்டலில் சதி திட்டம் தீட்டியதாக கைதானவர்களில் விக்ரமன் முக்கியமானவர் ஆவார். இவர் முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தார். மர்டர் மணிகண்டனின் கூட்டாளியான ஏழுமலை நாவற்குளத்தில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விக்ரமனை கடந்த 25-ந் தேதி முதல் தங்க வைத்துள்ளார். அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். ரவுடிகள் கூடி சதி திட்டம் தீட்டிய அன்று அவரை நட்சத்திர ஓட்டலுக்கும் ஏழுமலை அழைத்து வந்துள்ளார். இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன.

மேற்கண்டவாறு போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்