பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவிகள் ஒப்பாரி வைத்து போராட்டம்

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ஈ.வெ.ரா.கல்லூரி மாணவிகள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2018-02-01 01:00 GMT
திருச்சி,

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் முழுவதையும் ரத்து செய்யக்கோரியும் அரசியல் கட்சியினர், மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் திருச்சியில் பல கட்டங்களாக நடந்து வருகிறது. அதன் படி திருச்சி ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் கடந்த 5 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று 6-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாசல் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் ஒருவரை பாடையில் கிடத்தியபடி பாடையை சுற்றி மாணவிகள் சிலர் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இது குறித்து மாணவ-மாணவிகள் கூறும் போது பஸ் கட்டண உயர்வை முழுவதும் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். போராட்டத்தை முன்னிட்டு கல்லூரிக்கு கால வரையின்றி விடுமுறை விடப்பட்டு உள்ளது என்று கூறினர். இதைத்தொடர்ந்து விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகள் பலர் நேற்று மதியம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

ரத்து செய்யப்படுகிறது

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் கேட்ட போது 1, 2-ந்தேதி (வியாழன்,வெள்ளி) ஆகிய 2 நாட்கள் மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. மற்ற அலுவலக பணிகள் நடக்கும். மேலும் பேராசிரியர்களுக்கு கல்லூரியில் மற்ற பணிகள் உள்ளன. எனவே அவர்களும் கல்லூரிக்கு வருவார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு வழக்கம் போல் விடுமுறை ஆகும். எனவே வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) கல்லூரி வழக்கம் போல் செயல்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்