150 ஆண்டுகளுக்கு பிறகு வந்த அபூர்வ சந்திரகிரகணம்: தஞ்சை பெரியகோவிலில் நடை அடைப்பு

150 ஆண்டுகளுக்கு பிறகு வந்த அபூர்வ சந்திரகிரகணத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நேற்று நடை அடைக்கப்பட்டது.

Update: 2018-02-01 00:45 GMT
தஞ்சாவூர்,

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும்போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

நேற்று முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. 150 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இந்த சந்திரகிரகணம் அபூர்வ சந்திரகிரகணமாகும்.

பெரிய கோவிலில் நடை அடைப்பு

கிரகண நேரத்தில் கோவில்களின் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி, முருகன் சன்னதி, வராகி அம்மன் சன்னதி ஆகியவற்றில் உச்சிகால பூஜை முடிந்தவுடன் நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

கிரகணம் முடிந்தவுடன் இரவு 9.15 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பரிகார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அர்த்தஜாம பூஜையுடன் நடை அடைக்கப்பட்டது.

வழக்கமாக மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என்று கருதி வெளியூர்களில் இருந்து நேற்று காலை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், கோவில் நடை அடைக்கப்பட்டதை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

மாரியம்மன் கோவில்

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டால் இரவு 9 மணிக்கு தான் நடை அடைக்கப்படுவது வழக்கம். ஆனால் சந்திரகிரகணத்தையொட்டி நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு இரவு 9.15 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது.

இதேபோல அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட அனைத்து கோவில்களிலும் சந்திரகிரகணத்தின்போது நடை அடைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்