சேலத்தில் தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜ

தைப்பூசத்தையொட்டி சேலத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-02-01 00:30 GMT
சேலம்,

தைப்பூசத்தையொட்டி சேலத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. சேலம் உடையாப்பட்டியில் உள்ள கந்தாஸ்ரமத்தில் காலை கணபதி ஹோமத்தை தொடர்ந்து மகான்யாச பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரிக்கும், ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமி அதிஷ்டானத்திற்கும் அபிஷேகமும், தொடர்ந்து ஞானஸ்கந்த குருநாதருக்கு அபிஷேகமும் நடந்தது.

அதைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சுகவனேஸ்வரர் கோவில்

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில், முருகன், வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம் உள்பட பல திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சீலநாயக்கன்பட்டி ஊத்துமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி காலையில் மூலவருக்கு அபிஷேகம் செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காவடி பழனியாண்டவர்

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் தைப்பூசத்தையொட்டி காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம், கோமாதா பூஜை, விஸ்வரூப தரிசனம் ஆகியவை நடந்தது. இதையடுத்து காலை 6 மணிக்கு காவடி பழனியாண்டவருக்கு பால், பன்னீர், தயிர், இளநீர் உள்பட 64 வகை மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

7 மணிக்கு சாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. 9 மணிக்கு கோவிலுக்கு பக்தர்கள் காவடிகள் சுமந்தப்படி வந்தனர். இதையடுத்து சாமிக்கு நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள்  கலந்து கொண்டனர். மாலையில் சந்திர கிரகணத்தையொட்டியும் கோவில் திறக்கப்பட்டு சாமி தரிசனம் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு தீர்த்த குடம் புறப்படுதல், தீர்த்தாபிஷேகம், 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் கோவில் பிரகாரத்தில் தங்கத்தேர் இழுக்கப்பட்டு வழிபாடு நடந்தது.

பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில்

சேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலில் காலையில் 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகனுக்கு நவரத்ன அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது.

சேலம் பெரமனூரில் உள்ள கந்தசாமி ஆறுமுகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி காலையில் கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், கந்தசாமி ஹோமம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து ஆறுமுகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நடை அடைப்பு

சேலம் வின்சென்ட் முத்துக்குமாரசாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி முருகனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல குமாரசாமிப்பட்டி சுப்பிரமணிய சாமி கோவில், சூரமங்கலம் முருகன் கோவில், ஏற்காடு அடிவாரம் ஆறுபடையப்பன் கோவில் என அனைத்து முருகன் கோவில்களிலும் விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றன.

சந்திர கிரணத்தையொட்டி நேற்று மாலை பல கோவில்களில் நடை அடைக்கப்பட்டது. அது முடிந்த பின்னர் கோவிலில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்