கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை

கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-02-01 00:30 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து கட்டு–கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின்ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் மேள–தாளம் முழங்க இந்த நெற்கதிர்கள் அங்கு இருந்து முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பிறகு அந்த நெற்கதிர்களை பகவதி அம்மன் முன் உள்ள மூலஸ்தான மண்டபத்தில் படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் ராதாகிருஷ்ணன், மணிகண்டன், விட்டல், பத்மநாபன், கீழ்சாந்திகள் சீனிவாசன், ராமகிருஷ்ணன், ஸ்ரீதர் ஆகியோர் நடத்தினார்கள்.

பிறகு இந்த நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மனை தரிசனம் செய்து நெற்கதிர் பிரசாதத்தை வாங்கி சென்றனர். இந்த நெற்கதிர்களை வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வைத்தால் செல்வசெழிப்பு ஏற்படும் என்பதும், விளை நிலங்களில் இந்த நெல்மணிகளை தூவினால் அந்த ஆண்டு பயிர்கள் செழித்து வளரும் என்பதும் ஐதீகம்.

நிறைபுத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுகு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், தலைமை கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் நேற்று நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது.

மேலும் செய்திகள்