நில முறைகேடு புகார் கூறிய நவாப் மாலிக் மீது அவதூறு வழக்கு மந்திரி ஜெய்குமார் ராவல் அறிவிப்பு

தன் மீது நிலமுறைகேடு புகார் கூறிய நவாப் மாலிக் மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாக மந்திரி ஜெய்குமார் ராவல் கூறினார்.

Update: 2018-01-30 21:45 GMT
மும்பை,

தன் மீது நிலமுறைகேடு புகார் கூறிய நவாப் மாலிக் மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாக மந்திரி ஜெய்குமார் ராவல் கூறினார்.

மந்திரி மீது குற்றச்சாட்டு


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நவாப் மாலிக் சமீபத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “கடந்த 2009-ம் ஆண்டு அரசு அனல் மின் நிலைய திட்டத்திற்காக துலே மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு அந்த நிலத்தை மராட்டிய மந்திரி ஜெய்குமார் ராவல் விலைகொடுத்து வாங்கி மோசடி செய்துள்ளார். பலகோடி ரூபாய் செலவில் தொடங்க இருந்த அனல் மின் நிலைய திட்டத்தை கைவிட்டு அதற்கு பதிலாக சோலார் மின்சக்தி திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது” என்றார்.

வழக்கு தொடருவேன்

இந்த குற்றச்சாட்டை மந்திரி ஜெய்குமார் ராவல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரம் அற்றது. என் மீது தவறான தகவல் கூறியுள்ள நவாப் மாலிக் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன். அவர் மீது அவதூறு வழக்கு தொடருவேன்’ என்றார்.

இதற்கு நவாப் மாலிக் பதிலளிக்கையில், ‘நான் மந்திரி ஜெய்குமார் ராவலின் முடிவை வரவேற்கிறேன். அவருக்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் சமர்ப்பிப்பேன்’ என்றார்.

மேலும் செய்திகள்