தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னை பல்லவன் சாலை பணிமனை முற்றுகை பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பல்லவன் சாலை பணிமனை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2018-01-30 22:15 GMT
சென்னை,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், “பஸ் கட்டணத்தை வெகுவாக உயர்த்தி, பெயருக்கு சிறிதளவு குறைப்பு செய்து ஒரு கண்துடைப்பு வேலையை தமிழக அரசு செய்துள்ளது. மக்கள் எண்ணத்தை மதித்து உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்துத்துறை நஷ்டத்துக்கு லஞ்சமும், ஊழலும், நிர்வாக சீர்கேடுமே காரணமாகும். பஸ் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்”, என்றார்.

ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பல்லவன் சாலை பணிமனையை முற்றுகையிட்டு, அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் சமரசம் பேசியதை தொடர்ந்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. 

மேலும் செய்திகள்