4 வயது சிறுவனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை தானே கோர்ட்டு தீர்ப்பு

4 வயது சிறுவனை கொன்று உடலை தண்ணீர் தொட்டியில் வீசிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தானே கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2018-01-30 21:30 GMT
தானே,

4 வயது சிறுவனை கொன்று உடலை தண்ணீர் தொட்டியில் வீசிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தானே கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுவன் கொலை

தானேயில் உள்ள துர்பே சந்தையில் தக்காளி மற்றும் வெங்காய வியாபாரம் செய்து வந்தவர் சலீம் கான் (வயது 27).

கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி இவரை பார்க்க ஒருவர் தனது 4 வயது மகனுடன் சந்தைக்கு வந்தார். அவர் மகனை சலீம் கானிடம் ஒப்படைத்துவிட்டு, சிறு வேலை காரணமாக வெளியே சென்றிருந்தார்.

பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது சலீம் கானையும், அவரது மகனையும் அங்கு காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு சந்தை அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் அந்த சிறுவன் பிணமாக கிடந்தான்.

ஆயுள் தண்டனை

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலையை சலீம் கான் தான் செய்தார் என்பது உறுதியானது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். கொலையான சிறுவனின் தந்தை சலீம் கானுக்கு ரூ.45 ஆயிரம் கடன் கொடுத்து இருந்தார். இது தொடர்பான விரோதத்தில் அந்த நபரின் மகனை படுகொலை செய்தது தெரியவந்தது.

போலீசார் அவர் மீது தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நிறைவில், சிறுவனை அவர் தான் கொலை செய்தார் என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபணமானது. இதையடுத்து குற்றவாளியான சலீம் கானுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்