வரலாறு காணாத வகையில் பூண்டு விலை குறைந்தது புளி விலை ஏறுமுகம்
அரிசி, மிளகாய் வத்தல், பருப்பு வகைகள் விலை சரிந்து வரும் வேளைவில், வரலாறு காணாத வகையில் பூண்டு விலை வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், புளி விலை ஏறுமுகமாக காணப்படுகிறது.;
சென்னை,
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையிலும், நெல் விளைச்சல் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் மகிழும் வண்ணம் ஓரளவு இருந்துள்ளது. தற்போது, புதிய அரிசி வகைகள் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. இதேபோல், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு நெல்வரத்து உள்ளது. இதன் காரணமாக, அரிசி வகைகள் விலை மளமளவென சரிந்து வருகின்றன.
கடந்த மாதம் ரூ.850-க்கு விற்பனை செய்யப்பட்ட 25 கிலோ ரூபாளி பொன்னி அரிசி மூட்டை தற்போது ரூ.750 ஆக குறைந்துள்ளது. இதேபோல், டீலக்ஸ் பொன்னி அரிசி மூட்டை ரூ.950-ல் இருந்து ரூ.850 ஆகவும், பாபட்லா பொன்னி (புதியது) ரூ.1,050-ல் இருந்து ரூ.850 ஆகவும், பாபட்லா முதல் ரகம் ரூ.1,150-ல் இருந்து ரூ.1,050 ஆகவும் விலை சரிந்துள்ளது.
மேலும் குறையும்
இட்லி அரிசி 25 கிலோ எடை கொண்ட மூட்டை முதல் ரகம் ரூ.950-ல் இருந்து ரூ.850 ஆகவும், 2-வது ரகம் ரூ.850-ல் இருந்து ரூ.750 ஆகவும் விலை குறைந்துள்ளது. ஆந்திரா ஸ்டீம் அரிசி மூட்டை (25 கிலோ) ரூ.1,200-ல் இருந்து ரூ.950 ஆகவும், கர்நாடகா ஸ்டீம் அரிசி மூட்டை ரூ.1,300-ல் இருந்து ரூ.1,200 ஆகவும் விலை சரிந்துள்ளது.
நெல் வரத்து இன்னும் அதிகரித்து கொண்டே இருப்பதால், விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார். இதேபோல், இருப்பு வைத்து விற்பனை செய்யும் பழைய அரிசி விலையும் குறைந்து வருகிறது. பழைய அரிசி முதல் ரகம் (25 கிலோ மூட்டை) ரூ.1,400-ல் இருந்து ரூ.1,300 ஆகவும், 2-வது ரகம் ரூ.1,300-ல் இருந்து ரூ.1,200 ஆகவும் விலை சரிந்துள்ளது.
பொன்னி பச்சரிசி 25 கிலோ மூட்டை (புதியது) ரூ.1,000-ல் இருந்து ரூ.900 ஆகவும், பொன்னி பச்சரிசி (பழையது) ரூ.1,250-ல் இருந்து 1,150 ஆகவும், பாசுமதி அரிசி முதல் ரகம் ஒரு கிலோ ரூ.110-ல் இருந்து ரூ.95 ஆகவும், 2-வது ரகம் ரூ.100-ல் இருந்து ரூ.80 ஆகவும், 3-வது ரகம் ரூ.90-ல் இருந்து ரூ.75 ஆகவும் விலை குறைந்துள்ளது.
குண்டு மிளகாய் வத்தல்
அரிசி விலையை போல், குண்டு மிளகாய் வத்தல் விலையும் சரிந்து வருகிறது. கடந்த மாதம் ரூ.370-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ குண்டு மிளகாய் வத்தல் (முதல் ரகம்) தற்போது ரூ.270 ஆக குறைந்துள்ளது. இதேபோல், 2-வது ரக குண்டு மிளகாய் வத்தல் ரூ.320-ல் இருந்து ரூ.220 ஆகவும், பழைய மிளகாய் வத்தல் ரூ.250-ல் இருந்து ரூ.150 ஆகவும் விலை சரிவை கண்டுள்ளது.
இந்த ஆண்டு குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பூண்டு விளைச்சல் அமோகமாக நடந்துள்ளது. இதனால், வரலாறு காணாத வகையில் அதன் விலையும் சரிந்து வருகிறது. பூண்டு முதல் ரகம் (ஒரு கிலோ) ரூ.100-ல் இருந்து ரூ.60 ஆகவும், 2-வது ரகம் ரூ.70-ல் இருந்து ரூ.30 ஆகவும் விலை குறைந்துள்ளது.
50 கிலோ எடைகொண்ட சர்க்கரை மூட்டை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.1,750 ஆக விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.42-ல் இருந்து ரூ.37 ஆக குறைந்துள்ளது.
புளி விலை அதிகரிப்பு
மேலும், பருப்பு வகைகளின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த மாதம் 100 கிலோ எடை கொண்ட துவரம் பருப்பு மூட்டை ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அது ரூ.6,800 ஆக விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.80-ல் இருந்து ரூ.75 ஆக குறைந்துள்ளது.
இதேபோல், உளுந்தம் பருப்பு மூட்டை (100 கிலோ) ரூ.7,800-ல் இருந்து ரூ.6,700 ஆகவும், ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ரூ.85-ல் இருந்து ரூ.75 ஆகவும் விலை சரிந்துள்ளது. 100 கிலோ எடை கொண்ட பாசிப்பருப்பு மூட்டை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.7,300 ஆகவும், ஒரு கிலோ பாசிப் பருப்பு ரூ.90-ல் இருந்து ரூ.80 ஆகவும் விலை குறைந்துள்ளது.
கடலை பருப்பு மூட்டை (50 கிலோ) ரூ.2,900-ல் இருந்து ரூ.2,600 ஆகவும், ஒரு கிலோ கடலை பருப்பு ரூ.70-ல் இருந்து ரூ.60 ஆகவும் விலை சரிந்துள்ளது. இவ்வாறு மளிகை பொருட்களின் விலை குறைந்து வரும் நிலையில், புளி விலை மட்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ புளி (முதல் ரகம்) இப்போது ரூ.180 ஆக விலை அதிகரித்துள்ளது. 2-வது ரக புளி ரூ.90-ல் இருந்து ரூ.150 ஆகவும் விலை உயர்த்துள்ளது.