பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் புதிதாக 4 டேங்குகள் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கரூர் அருகே பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் புதிதாக 4 டேங்குகள் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கலெக்டர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2018-01-30 23:00 GMT
கரூர்,

கரூர் அருகே ஆத்தூர் கிராமத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் முனையம் அமைந்துள்ளது. இதில் இருந்து பெட்ரோல், டீசல், மண்எண்ணெய் ஆகியவை கொச்சி-கோவை வழியாக குழாய் மூலம் பெட்ரோலிய நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் முனையத்தில் இருந்து கரூர், திருச்சி உள்பட மொத்தம் 24 மாவட்டங்களுக்கு பெட்ரோலிய பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிறுவன முனைய வளாகத்தில் சேமிப்பு கிடங்குகள், டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் முனைய திறன் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 770 கிலோ லிட்டர் ஆகும்.

இந்த நிலையில் பெட்ரோலில் எத்தனால் கலந்தும், டீசலில் பயோ டீசல் கலந்தும் வினியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வாகனவாயு உமிழ்வு கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும் எனவும், கச்சா பெட்ரோலியத்தின் இறக்குமதி சுமையை குறைக்க முடியும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு பாரத் பெட்ரோலிய நிறுவனங்களின் முனையம் உள்ள இடத்தில் இதற்கான டேங்குகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கரூர் மாவட்டம் ஆத்தூரில் அமைந்துள்ள முனையத்தில் எத்தனால் மற்றும் பயோ டீசல் ஆகியவற்றை சேமிக்க 4 புதிய டேங்குகள் அமைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் எத்தனால் தலா 858 கிலோ லிட்டர் கொள்ளளவில் 2 டேங்குகளும், பயோ டீசல் தலா 2,500 லிட்டர் கொள்ளளவில் 2 டேங்குகளும் நிறுவப்படுகிறது.

பெட்ரோலிய நிறுவன முனையத்தில் புதிய டேங்குகள் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கரூரில் இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசுகையில்,“நிறுவனம் அமைவதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக டேங்குகள் அமையும் போது நேரடியாகவும், மறைமுகமாவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.


அதனை தொடர்ந்து பொதுமக்கள் சிலர் எழுந்து இந்த கூட்டம் முறைப்படி அறிவிக்காமல் நடத்தப்படுகிறது என குற்றம் சாட்டினர். அப்போது பொதுமக்கள் தரப்பில் ராஜா, பாலகுருசாமி, ஈஸ்வரன், லோகநாதன் உள்பட பலர் பேசினர். அவர்கள் பேசியதாவது:-

இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவது குறித்து எந்தவித அறிவிப்பும் முறையாக வெளியிடவில்லை. நாங்களாக கேள்விப்பட்டு இங்கு வந்துள்ளோம். கூட்டத்தில் பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களே கருத்து கேட்பு கூட்டத்திற்கு பொதுமக்கள் என்ற போர்வையில் அழைக்கப்பட்டு வந்துள்ளனர். வருகைப்பதிவேடு புத்தகத்திலும் அவர்களது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வெளியூரை சேர்ந்தவர்கள் பலர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

புதிய டேங்க் அமைந்தால் பாதிப்பு

நிறுவனம் அமைந்துள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த யாரும் வருகைப்பதிவேடு புத்தகத்தில் கையெழுத்திடவில்லை. இந்த கூட்டம் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தை வேறு ஒரு நாளில் நடத்த வேண்டும். நிறுவனத்தை சுற்றியுள்ள ஆத்தூர், காதப்பாறை, ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்கு ஆகிய 4 கிராமங்களை சேர்ந்தவர்களை கருத்து கேட்பு கூட்டத்திற்கு அழைக்க வேண்டும். 4 கிராமத்திற்கும் பொதுவான ஒரு இடத்தில் கருத்து கேட்பு கூட்டத்தை மற்றொரு நாள் நடத்த வேண்டும். ஏற்கனவே அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் போதிய பாதுகாப்பு இல்லை. மேலும் புதிதாக டேங்குகள் அமைந்தால் பாதிப்பு ஏற்படும்.

பெட்ரோல், டீசல் நிரப்ப வந்து செல்லும் லாரிகளுக்கு உரிய சாலை வசதி இல்லை. ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கிறது. இந்த நிலையில் மேலும் லாரிகள் வர வாய்ப்பு உள்ளது. லாரிகள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரிகள் வந்து செல்லும்படி அறிவுறுத்த வேண்டும். மேலும் அங்குள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

லாரியில் நிரப்பப்படும் பெட்ரோல், டீசல் திருடப்படுகிறது. இதில் சில நேரங்களில் தீ விபத்து கூட நேர்ந்துள்ளது. நேற்று முன்தினம் கூட தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும்.

நிறுவனத்தில் ஆழ் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டிருப்பதால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிறுவனம் கிராமத்திற்கு எந்த வசதியையும் செய்யவில்லை. ஒரு பள்ளிக்கு சுற்றுச்சுவரை மட்டும் கட்டியுள்ளது. புதிய டேங்குகள் குறித்து வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும். நிறுவனத்தின் வெளிப்பகுதியில் சாலையில் மரங்கள் நட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதையடுத்து கலெக்டர் கோவிந்தராஜ் பேசுகையில், “புதிதாக டேங்குகள் அமைக்க கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துகள் பதிவு செய்யப்படும். கோரிக்கைகள் தொடர்பாக நிறுவனத்திடம் பேசி அடுத்த கூட்டத்தில் அதற்கான பதில்கள் தெரிவிக்கப்படும். இந்த கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த கூட்டம் பொதுமக்கள் விருப்பப்படி 4 கிராமத்திற்கும் பொதுவான இடத்தில் நடைபெறும்” என்றார்.

இந்த கருத்து கேட்பு கூட்டம் சுவரொட்டிகள், நோட்டீசு மூலம் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்களுக்கு நன்கு அறியும்படி தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டினர். கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜேந்திரபாபு, பாரத் பெட்ரோலிய நிறுவன முனைய மேலாளர் நாராயணன், திட்ட மேலாளர் ஷாஜி ஹக்கிம், உதவி கலெக்டர் விஜயகுமாரி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் பொதுமக்கள், பெட்ரோலிய நிறுவன முனையத்தில் புதிதாக டேங்குகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேட்டியளித்தனர். கூட்டத்தில் முனையத்தில் அமைய உள்ள டேங்குகள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் குறும்படம் மூலம் ஒளிபரப்ப அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்த குறும்படத்தை ஒளிபரப்ப வேண்டாம், மற்றொரு நாளில் கூட்டம் நடைபெறும் போது ஒளிபரப்பும் படி கூறினர். இதனால் அந்த குறும்படம் ஒளிபரப்பப்படவில்லை. எத்தனால், பயோ டீசல் சேமிக்க புதிதாக டேங்குகள் அமைக்க கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்