அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் போராட்டம்

கரூர் அருகே குளத்துப்பாளையத்தில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-30 22:45 GMT
கரூர்,

கரூர் அருகே குளத்துப் பாளையத்தில் பகவத் சிங் தெருவில் சாக்கடை கால்வாய் பாலம் புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறி நேற்று காலை அப்பகுதி பொதுமக்கள் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ரவிக்குமார் தலைமையில் கால்வாய் பாலம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பகவத்சிங் தெரு உள்பட பக்கத்து தெருக்களில் சாலை வசதி இல்லை. சாக்கடை வசதி இல்லை. சாக்கடையில் பல இடங்களில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. தெருவில் மின்விளக்கு சரியாக எரிவதில்லை. மின்கம்பம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. சாக்கடை கால்வாய் பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் அதன் உயரத்திற்கு தகுந்தாற் போல சாலை அமைத்து சரி செய்யப்படவில்லை. பணி முழுமையாக முடிவடையாமல் உள்ளது. இதனால் தெருவில் எந்தவித வாகனமும் செல்ல முடியவில்லை.

அதிகாரிகள் உறுதி

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாத ஒருவரை ஆம்புலன்ஸ் வேன் மூலம் கொண்டு செல்ல முயன்ற போது வேன் கால்வாய் பாலத்தை தாண்டி வர முடியவில்லை. எனவே கால்வாய் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை எடுத்துக்கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் போராட்டம் நடத்தினோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையில் தி.மு.க. மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் நகராட்சி அதிகாரிகளிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக பேசினர். பணிகளை உடனே தொடங்காவிட்டால் பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர். இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். வெங்கமேடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

மேலும் செய்திகள்