பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்; 119 பேர் கைது

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கும்பகோணத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 119 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தின்போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-30 23:00 GMT
கும்பகோணம்,

பஸ் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றுமுன்தினம் 5-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், கடந்த 25-ந் தேதி தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நேற்று மாணவர்களின் போராட்டத்தை தடுப்பதற்காக கல்லூரி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி வளாகத்தில் கூடி நின்றனர். இவர்கள் கல்லூரியில் இருந்து வெளியே சென்று போராட்டத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காக கல்லூரி வாசலில் போலீசார் கயிற்றை கட்டினர்.

இதனால் மாணவர்கள்- போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது மாணவர்கள் கயிற்றை அறுத்து விட்டு வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலின்போது மாணவர்கள் சிலர் சாலையில் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இவர்களை போலீசார் இழுத்து சென்று கைது செய்தனர்.

பின்னர் அங்கிருந்த மற்ற மாணவர்களும் சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தின்போது மொத்தம் 8 மாணவிகள் உள்பட 119 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினர்.

மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையடுத்து கல்லூரிக்கு இன்று (புதன்கிழமை) முதல் காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சீதா ராமன் அறிவித்து உள்ளார். 

மேலும் செய்திகள்