கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி 2 பேர் படுகாயம்

கருங்கல் அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-01-30 22:45 GMT
கருங்கல்,

மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலம் மறுகால்விளையை சேர்ந்தவர் ஞானசீலன். இவருடைய மகன் ஜெனில்குமார்(வயது 19). கட்டிட தொழிலாளி. இவருடன், உறவினர்களான தக்கலை கொல்லன்விளை திட்டை பகுதியை சேர்ந்த முருகன் மகன் முரளி(18), திருவிதாங்கோடு பசிகுளத்தன்கரையை சேர்ந்த அய்யப்பன் மகன் விஷ்ணு(18) ஆகிய 2 பேரும் வேலை செய்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கடையை அடுத்துள்ள வேங்கோடு பகுதியில் முரளியின் பாட்டி இறந்து விட்டார். நேற்று அதற்கான 16-ம் நாள் விசேஷம் நடைபெற்றது.

சாவு

இதில் கலந்து கொள்வதற்காக முரளி, ஜெனில் குமார், விஷ்ணு ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேங்கோடு சென்றனர்.

விசேஷத்தில் கலந்து கொண்ட பின்னர், மதியம் 1 மணியளவில் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் கருங்கல் அருகே தொலையாவட்டம் சந்திப்பில் வந்தபோது, எதிரே வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெனில்குமார் பரிதாபமாக இறந்தார்.

தீவிர சிகிச்சை

முரளி, விஷ்ணு ஆகிய 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்