கோலாப்பூரில் பரிதாபம் மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு ஓய்வுபெற்ற போலீஸ்காரர் தற்கொலை

கோலாப்பூரில், மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, ஓய்வுபெற்ற போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-01-30 21:30 GMT
புனே,

கோலாப்பூரில், மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, ஓய்வுபெற்ற போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்டார்.

ஓய்வுபெற்ற போலீஸ்காரர்


கோலாப்பூர் மாவட்டம் தேவ்கர் தாலுகா பானந்த் ராஜலெட்சுமி நகரை சேர்ந்தவர் பபன்ராவ்(வயது65). மும்பையில் போலீஸ்காரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரேகா(60). இவர்களுக்கு சந்தோஷ், சச்சின் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் மும்பையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும் பபன்ராவின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர் ஒருவர் கதவை தட்டிப்பார்த்தார்.

மனைவியை கொன்று தற்கொலை

ஆனால் கணவர், மனைவி இருவரும் கதவை திறக்கவில்லை. பின்னர் இதுபற்றி அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் பபன்ராவும், ரேகாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களது உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து இருந்தன. போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அங்கு கிடந்த கைத்துப்பாக்கி மற்றும் கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

விசாரணை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பபன்ராவ் தனது மனைவி ரேகாவை சுட்டு கொன்றுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

போலீசார் கைப்பற்றிய கடிதத்தில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்பது உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்