மோட்டார்சைக்கிள்–லாரி மோதல்; ஊர்க்காவல் படைவீரர் பலி

பொங்கலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஊர்க்காவல் படைவீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-01-30 20:59 GMT

பொங்கலூர்,

பொங்கலூரை அடுத்த ராமேகவுண்டம்பாளையத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கன்னிமுத்து (வயது 24). திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படை வீரரான இவர், பல்லடம் போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பல்லடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். நள்ளிரவு 1 மணி அளவில் பொங்கலூர் பி.ஏ.பி. வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கீழே விழுந்த கன்னிமுத்துவை மோட்டார்சைக்கிளுடன் லாரி இழுத்து சென்றது. இதனால் பயந்த லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் கன்னிமுத்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அதை பார்த்து அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கன்னிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் நேற்றுகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்