பாபநாசம் மலையில் லோகமுத்திரா சிலை உடைப்பு

பாபநாசம் மலையில் லோகமுத்திரா சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான படங்கள் வாட்ஸ்அப்பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-01-30 23:30 GMT
விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு மேலே உள்ள கல்யாண தீர்த்தத்தில் கோடிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு அகஸ்தியர் தனது மனைவி லோகமுத்திராவுடன் ரதத்தில் நிற்பது போன்று சிலை உள்ளது. இதில் உள்ள லோகமுத்திரா சிலையின் தலைப்பகுதி முற்றிலும் உடைத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) கோடிலிங்கேசுவரர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடக்கிறது. இதற்காக நேற்று கோவிலுக்கு சென்ற பக்தர்கள், லோகமுத்திரா சிலை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே லோகமுத்திரா சிலையின் தலைப்பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது போன்ற படங்கள் வாட்ஸ் அப்பில் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிலை எப்போது உடைக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.

ஏனென்றால் கடந்த 28-ந் தேதி முதல் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வனப்பகுதிக்குள் யாரும் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

எனவே அதற்கு முன்னதாகவே சிலை உடைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்