பள்ளிக்கூட ஆசிரியர் பணி இடைநீக்கம்

மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய பள்ளிக்கூட ஆசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-01-30 22:30 GMT
சேரன்மாதேவி,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த கரிசல்பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 40). இவர் வீரவநல்லூரில் உள்ள பாரதியார் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமல்ராஜ் மீது வீரவநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியரை கைது செய்ய வேண்டும். துறைவாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வீரவ நல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே மாணவிகளிடம் ஆசிரியர் அமல்ராஜ் தவறாக நடப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாணவிகளின் பெற்றோர் அமல்ராஜ் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகானந்தம், மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக கூறி அமல்ராஜை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்