பாளையங்கோட்டையில் புத்தக திருவிழா 3-ந் தேதி தொடங்குகிறது

பாளையங்கோட்டையில் புத்தக திருவிழா 3-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான விழிப்புணர்வு பலூனை கலெக்டர் சந்தீப் நந்தூரி பறக்கவிட்டார்.

Update: 2018-01-30 22:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில், ‘நெல்லை புத்தக திருவிழா-2018’ பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தில் வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) மாலையில் தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது. புத்த திருவிழாவில் 110 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 4-ந் தேதி காலை 10 மணிக்கு அமைச்சர் ராஜலட்சுமி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார்.

மாலை 6 மணிக்கு எழுத்தாளர்கள் வெங்கடேசன், ரவிகுமார் ஆகியோர் பேசுகிறார்கள். 5-ந்தேதி மாலை 6 மணிக்கு சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்கள் வண்ணதாசன், தோப்பில் முகமது மீரான் ஆகியோர் பேசுகிறார்கள்.

6-ந் தேதி மாலை 6 மணிக்கு எழுத்தாளர்கள் உதயசங்கர், சீனிவாசன், நக்கீரன் ஆகியோர் பேசுகிறார்கள். 7-ந்தேதி மாலை 6 மணிக்கு எழுத்தாளர்கள் தமிழ்செல்வன், சமஸ் ஆகியோர் பேசுகிறார்கள். 8-ந்தேதி மாலை 6 மணிக்கு பேராசிரியர்கள் காமராஜ், சிவசு ஆகியோர் பேசுகிறார்கள். 9-ந்தேதி மாலை 6 மணிக்கு டாக்டர் சிவராமன், இயற்கை வேளாண்மை அறிஞர் பாமயன் ஆகியோர் பேசுகிறார்கள்.

10-ந் தேதி மாலை 6 மணிக்கு எழுத்தாளர்கள் மலர்வதி, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் பேசுகிறார்கள். 8 மணிக்கு கவிஞர் தேவேந்திரபூபதி தலைமையில் கவிதை வாசிப்பு நடக்கிறது. 11-ந்தேதி மாலை 5 மணிக்கு குழந்தைகள் நாடகமும், 6 மணிக்கு சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடான் பேசுகிறார். இரவு 8 மணிக்கு புத்தக திருவிழா நிறைவு பெறுகிறது. கலெக்டர் சந்தீப்நந்தூரி சிறப்புரையாற்றுகிறார். தினமும் புத்தக திருவிழா மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இந்த புத்தக திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ராட்சத பலூனை நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி பறக்கவிட்டார்.

நிகழ்ச்சியில் பயிற்சி உதவி கலெக்டர் இளம்பகவத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் கண்ணன், டாக்டர் நிர்மலா, நெல்லை மருத்துப் பணிகள் துணை இயக்குனர்கள் கார்குழலி, வசந்தகுமாரி, சுபைர்அசன் முகமதுகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்