பத்திரப்பதிவு செய்ய காலதாமதம்: சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மீன்சுருட்டியில் பத்திரப்பதிவு செய்ய காலதாமதம் ஆனதால் சார்பதிவாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-01-30 23:00 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக தனபாலன் (வயது 53) பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு, பதிவு திருமணம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நேற்று காலை வழக்கம் போல் சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிலையில் மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்த பிரபு (30) என்பவர் அலுவலகத்தில் தனது நிலத்தை கிரயம் செய்வதற்கான ஆவணங்களை கொடுத்துள்ளார். மேலும் கங்கவடங்க நல்லூரை சேர்ந்த விஜயலட்சுமி (35) தனது பெயரில் பத்திரப்பதிவு செய்வதற்காக ஆவணங்களை கொடுத்துள்ளார்.


இந்நிலையில், கணினியில் பத்திரப்பதிவு செய்ய காலதாமதம் ஆனது. இதனால் மாலை 5 மணி வரை பத்திரப்பதிவு நடைபெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திவாகர், வசந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பத்திரப்பதிவு உடனடியாக செய்து கொடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்