மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தொழிலாளி புகார்

நாங்குநேரி அருகே மகன் சாவில் மர்மம் இருப்பதாக தொழிலாளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-30 23:30 GMT
நாங்குநேரி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பனையங்குளத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய 2-வது மனைவியின் மகன் சுந்தர் என்ற ராமசுந்தர் (வயது 27). 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி ஜெனிதா என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒருவயதில் குழந்தை உள்ளது.

சுந்தர், சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். அங்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் வேலையை விட்டு விட்டு தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அங்குள்ள சுண்ணாம்பு கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த வேலையை விட்டு விட்டு மனைவி குழந்தையுடன் நாங்குநேரி அருகில் உள்ள மருதகுளத்துக்கு வந்தார்.

கடந்த 13-ந் தேதி சளி தொல்லைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து மாத்திரைகள் வாங்கி வந்தார். அன்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்கினார். காலையில் நீண்ட நேரமாகியும் அவர் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை. சந்தேகமடைந்த மனைவி, அவரை எழுப்பி பார்த்துள்ளார். அவரிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. அதிர்ச்சி அடைந்து அவர் போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு திரண்டு வந்து பார்த்தனர். சுந்தர் படுக்கையில் பிணமாக கிடந்தார்.

அப்படி இருந்தும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை தூக்கி சென்றனர். அங்கு சுந்தரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். பின்னர், அவருடைய உடலை மருதகுளத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதற்கிடையே சுந்தரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், உடலை தோண்டி பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவருடைய தந்தை இசக்கிமுத்து நேற்று முன்தினம் மூன்றடைப்பு போலீசில் புகார் மனு கொடுத்தார். அதன்படி சுந்தர் உடலை தோண்டி பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

நேற்று காலையில் நாங்குநேரி தாசில்தார் ஆதி நாராயணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர், மூன்றடைப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணியன் ஆகியோர் மருதகுளத்துக்கு வந்தனர். தாசில்தார் முன்னிலையில், சுந்தரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் செல்வ முருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

பரிசோதனை அறிக்கையின் முடிவில், சந்தேகப்படும்படியான மரணம் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மகனின் உடலை பனையங்குளத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதாக இசக்கிமுத்து அதிகாரிகளிடம் கூறியதை தொடர்ந்து சுந்தரின் உடல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி நேற்று காலை முதல் மாலை வரை பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்