மோட்டார் சைக்கிள் மோதி அரிசி ஆலை உரிமையாளர் பலி

சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி அரிசி ஆலை உரிமையாளர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2018-01-30 23:00 GMT
சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தை அடுத்த சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பிரின்ஸ் துரை (வயது 64). விவசாயியான இவர் அப்பகுதியில் அரிசி ஆலை நடத்தி நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் பக்கத்து ஊரான பழனியப்பபுரத்தில் உள்ள தனது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் 2 உர மூட்டைகளை ஏற்றி சென்றார்.

வயலின் அருகில் சென்றதும் பிரின்ஸ்துரை மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி விட்டு, உரமூட்டைகளை கீழே இறக்கினார். அவற்றில் ஒரு மூட்டையை தொழிலாளி ஒருவர் வயலுக்கு தூக்கி சென்றார். மற்றொரு மூட்டையை தொழிலாளி எடுத்து செல்வதற்காக பிரின்ஸ்துரை சாலையோரம் காத்து நின்றார்.

அப்போது செய்துங்கநல்லூர் திருவரங்கபட்டியைச் சேர்ந்த பெருமாள் (50), மணல்விளையைச் சேர்ந்த சுப்பையா (65) ஆகிய 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பேய்க்குளத்துக்கு சென்று கொண்டிருந்தனர். பழனியப்பபுரம் பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற பிரின்ஸ்துரையின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரின்ஸ்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெருமாள், சுப்பையா ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த பெருமாள், சுப்பையா ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் இறந்த பிரின்ஸ்துரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பிரின்ஸ்துரைக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

மேலும் செய்திகள்