கேளம்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கொலையா? போலீஸ் விசாரணை

கேளம்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-01-30 22:30 GMT
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே செங்கண்மால் பஸ் நிலையம் அருகில் தரைப்பாலம் பள்ளத்தில் துர்நாற்றம் வீசுவதை கண்ட பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தண்ணீரில் மூழ்கியபடி அடையாளம் தெரியாத வகையில் அழுகிய நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இது குறித்து கேளம்பாக்கம் போலீசுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாலத்தின் மீது அமர்ந்து இருந்த போது தவறி விழுந்து இருந்தாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அங்கு வெளிமாநிலத்தை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். இறந்தவர் அவர்களில் யாராவது இருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்