மும்பையில் வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்த வழி என்ன?

மும்பையில் வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-01-30 00:00 GMT
மும்பை,

மும்பையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. 4 சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் பலரிடம் அதனை நிறுத்துவதற்கான இடவசதி இல்லை. பல வாகனங்கள் சாலையோரத்தில் தான் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் தேவையில்லாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நரேஷ் பாட்டீல் மற்றும் சாம்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-

கார் வாங்க முடியாத சாதாரண மக்கள் சாலையோரத்தில் நடந்து செல்லக்கூட முடியவில்லை. காரணம் அங்கு சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகப்படியான வாகனங்களை அனுமதிக்கும்போது, அதன் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக வானங்களை நிறுத்த மறைமுகமாக அனுமதி அளிக்கிறது என்பதை மறந்துவிடவேண்டாம்.

எத்தனை குடும்பங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்கள் உள்ளது என்ற கணக்கு மாநகராட்சியிடம் இருக்கிறதா? நகரில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்தநிலை தொடர அனுமதிக்க கூடாது.

மாநில போக்குவரத்து துறை, வாகனங்களை வாங்கும்போதே அதன் உரிமையாளரிடம் அந்த வாகனங்களை நிறுத்த இடவசதி உள்ளதா? என்பது குறித்து ஆவணம் தாக்கல் செய்யவேண்டும் என்ற திட்டத்தை நடைமுறை படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும்.

மேலும் வாகனங்கள் பெருகுவதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து மராட்டிய அரசும், மும்பை மாநகராட்சியும் தங்களது யோசனையை 2 வாரங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்