சென்னை விமான நிலைய பாலத்தில் இருந்து குதித்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை? பயணிகள்-ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
சென்னை விமான நிலையத்தில் உள்ள 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து குதித்து ஆந்திர கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.;
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு செல்ல மேம்பாலம் உள்ளது.
நேற்று காலை மீனம்பாக்கம் உள்நாட்டு புறப்பாடு முனையம் 4-வது நுழைவு வாயில் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு கம்பி அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவர் திடீரென 50 அடி உயரத்தில் இருந்து விமான நிலையத்திற்கு ஊழியர்கள் செல்லும் பாதையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பயணிகள் ஓட்டம்
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த பயணிகள், ஊழியர்கள் அலறியடித்து ஓடிச்சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீசாரும் மத்திய தொழிற்படையினரும் அங்கு விரைந்து வந்து மேம்பாலத்தில் இருந்து விழுந்த வாலிபரின் உடலை கைப்பற்றினார்கள். அந்த பகுதியில் யாரும் போகாதபடி தடுப்பு ஏற்படுத்தினார்கள்.
ஆந்திர என்ஜினீயர்
போலீசார் நடத்திய விசாரணையில், பலியான வாலிபர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சைதான்யா வையூரு(வயது29) என்பதும், இவர் பெங்களூருரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றியதும் அவர் பெங்களுருக்கு செல்ல விமான நிலையம் வந்ததும் தெரியவந்தது.
விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, விமான நிலையத்தின் 4-வது நுழைவு வாயில் பகுதிக்கு வந்த சைதான்யா செல்போனில் அழைப்பு வந்ததும் அங்கிருந்து நகர்ந்து சென்று அருகில் உள்ள மேம்பால தடுப்பு கம்பிகள் மீது ஏறி அமர்ந்து இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன.
தவறி விழுந்தாரா? தற்கொலையா?
இதனால் செல்போன் பேசிக் கொண்டு இருந்தபோது அவர் தவறிவிழுந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதனை நேரில் பார்த்த அங்கிருந்தவர்கள் அவர் பாலத்தில் இருந்து குதித்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து மீனம்பாக்கம் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்தாரா? அல்லது தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றிய தகவல்கள் சைதான்யாவின் பெற்றோருக்கும் அவரது நண்பர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.