‘அ.தி.மு.க அரசுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை’ ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு

அ.தி.மு.க அரசுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை என கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2018-01-29 23:00 GMT
கும்பகோணம்,

த.மா.கா சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி பேசியதாவது:-

பஸ் கட்டண உயர்வை 100 சதவீதம் ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம். ஏற்கனவே விலைவாசி உயர்வால் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு மேலும் பெருஞ்சுமையாக பஸ் கட்டண உயர்வு உள்ளது. இதனால் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து போராடி வருகின்றனர். எனவே பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

வயல்களில் தண்ணீர் இல்லாமல் சம்பா சாகுபடி பயிர்கள் கருகி கொண்டிருக்கின்றன. கர்நாடகத்திடம் இருந்து காவிரியில் தண்ணீர் பெற்று தருவதற்கு மத்திய அரசிற்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அனைத்து கட்சி குழுவை...

மத்தியில் ஆளும் பா.ஜ.கவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் பாம்பும்-கீரியுமாக, எலியும்-பூனையுமாக உள்ளனர். கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க, கர்நாடகத்திடம் தண்ணீர் விடும்படி வற்புறுத்த மறுக்கிறது. தமிழக, கர்நாடக, மத்திய அரசுகள் டெல்டா விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் போக்கையும், வஞ்சிக்கும் மனப்பான்மையையும் கைவிட வேண்டும்.

அனைத்து கட்சி குழுவை தமிழக அரசு, புதுடெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரிடம் நிலைமையை நேரில் வலியுறுத்த வேண்டும். விவசாயிகளுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி கொள்ளிடம் மற்றும் காவிரியின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன் அதனை ஜி.எஸ்.டி வரி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். போக்குவரத்து கழகத்தை பொது நல நோக்கோடு செயல்படுத்த வேண்டும். அரசு லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற சுயநலம் இருக்க கூடாது. அ.தி.மு.க அரசுக்கு, தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை. மாநில அரசின் கொள்கைகளை மத்திய அரசுக்கு தாரைவார்த்து கைகட்டி நிற்கின்றனர்.

மீனவர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. வேலைவாய்ப்பு இல்லாத கல்வி கொள்கையாக உள்ளது. செயல்படாத மாநில அரசின் மீதும், எதிர்க்கட்சிகள் மீதும் தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே தமிழகத்தில் நல்லவர்கள் ஒன்று சேர வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்