பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் சாலை மறியல்

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கரூரில் தி.மு.க. தலைமையில் தோழமை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 454 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-01-29 23:00 GMT
கரூர்,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பஸ் கட்டண உயர்வை குறைத்து தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி திட்டமிட்டப்படி மறியல் போராட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி கரூரில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். மேலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட தோழமை கட்சியினர் திரண்டனர்.

கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் நோக்கி பகல் 11.15 மணி அளவில் வந்தனர். பஸ் நிலையம் அருகே மனோகரா ரவுண்டானா முன்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் பஸ் நிலையம் முன்பு செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்திருந்தனர்.

இந்த நிலையில் ஊர்வலமாக திரண்டு வந்தவர்கள் தடுப்புகள் அருகே வந்ததும் அதனை அகற்றி விட்டு ரவுண்டானா முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினர் மற்றும் தோழமை கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலர் தடுப்புகளை தூக்கி வீசி ரவுண்டானா அருகே சென்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அகற்றினர்.

இதற்கிடையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த மறுபுறம் சாலையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்தினர். மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் தோழமை கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதில் 65 பெண்கள் உள்பட 454 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சின்னசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன், நகர தலைவர் ஸ்டீபன் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்