தட்டுப்பாட்டை நீக்க கோரி திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மணல் தட்டுப்பாட்டை நீக்க கோரி திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;

Update: 2018-01-29 23:00 GMT
திருச்சி,

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

கோர்ட்டு உத்தரவினால் மணல் எடுக்காத நிலை உருவாகி மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மணல் லாரி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், கட்டிட பொறியாளர்கள், எலக்ட்ரிகல், சிமெண்ட், கம்பி கட்டுதல் போன்ற கட்டுமான தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.

அரியலூர், ஜெயங்கொண்டம், காட்டு மன்னார்கோவில், கடலூர், நாகப்பட்டினம், சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், திருவையாறு பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றின் எதிர்கரையில் மணல் திட்டுகள் உள்ளதால் வெள்ள காலங்களில் வெள்ள நீரால் விவசாய பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதிகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதன் மூலம் மணல் தட்டுப்பாட்டை நீக்க முடியும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் யுவராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மணல் லாரி உரிமையாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்