பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.- கூட்டணி கட்சியினர் சாலை மறியல்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.- கூட்டணி கட்சியினர் சார்பில் நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மதிவாணன் எம்.எல்.ஏ., உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-29 22:45 GMT
நாகப்பட்டினம்,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கீழையூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன் தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் மரியசார்லஸ், பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கீழையூர் போலீசார், தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் மாரிமுத்து, சார்லஸ், இலபழனியப்பன், ஞானசேகரன், இளம்பரிதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துபெருமாள் மற்றும் 2 பெண்கள் உள்பட 135 பேரை கைது செய்தனர்.

அதேபோல் திருமருகல் வடக்கு, தெற்கு மற்றும் திட்டச்சேரி பேரூர் தி.மு.க. சார்பில் நாகூரை அடுத்த வாஞ்சூர் ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய செயலாளர்கள் செல்வசெங்குட்டுவன் (வடக்கு), சரவணன் (தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் இளம்சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் திட்டச்சேரி பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாபுஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 210 பேரை கைது செய்தனர்.

நாகை புத்தூர் அண்ணாசிலை அருகே நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் மதிவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் மனோகரன், நகர செயலாளர் போலீஸ்பன்னீர், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன், விவசாய சங்க மாநில துணை செயலாளர் சரபோஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகைமாலி, நகர செயலாளர் பெரியசாமி, ம.தி.மு.க. நகர செயலாளர் மனுநீதிசோழன், ஒன்றிய செயலாளர் அய்யாப்பிள்ளை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பரிமளசெல்வன் மற்றும் 15 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், கீழ்வேளூர் கடைத்தெரு நாகை - திருவாரூர் சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் ராஜேஷ், பாவேந்தன், நகர செயலாளர் குணா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 20 பெண்கள் உள்பட 100 பேரை கீழ்வேளூர் போலீசார் கைது செய்தனர். முன்னதாக நாகை சாலையில் கீழ்வேளூர் பேரூர் தி.மு.க. சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் அட்சயலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாண்டியன், குணா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் வாய்மேட்டை அடுத்த தலைஞாயிறு பஸ் நிலையத்தில் தி.மு.க. சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மகாகுமார் தலைமை தாங்கினார். இந்த சாலை மறியலில் பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் வீரசேகரன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் வேணு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உத்திராபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பாளர் இளையராஜா, தி.மு.க. வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஜெய்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 32 பெண்கள் உள்பட 155 பேரை தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அவை தலைவர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சிவகுழுபாண்டியன், விவசாய தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளர் துரைராசு, விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் பாலு மற்றும் கலந்து கொண்டனர். இதில் 11 பெண்கள் உள்பட 110 பேரை வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வேதாரண்யத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., என்.வி.காமராஜ் தலைமையில் தி.மு.க. நகர செயலாளர் புகழேந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கரவடிவேல், நாகை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போஸ், மகிளா காங்கிரஸ் செல்வராணி, கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்