பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.- கூட்டணி கட்சியினர் 3 இடங்களில் சாலைமறியல்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.- கூட்டணி கட்சியினர் 3 இடங்களில் சாலைமறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 1,646 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-01-29 23:00 GMT
சேலம்,

தமிழகத்தில் பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் பழைய நிலையிலேயே பஸ் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மேலும் எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடந்த 27-ந் தேதி மாவட்டம் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டத்திலும் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் சாலைமறியல் போராட் டத்தை நடத்தினர்.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் ஓமலூர் பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், துணை செயலாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாக தி.மு.க.வினர் புறப்பட்டனர். பின்னர் சேலம் புதிய பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் முன்பு சேலம்-ஓமலூர் மெயின் ரோட்டில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், மாநகர துணை செயலாளர் லலிதா சுந்தரராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், பகுதி செயலாளர்கள் குமரவேல், ராமச்சந்திரன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சங்கீதா நீதிவர்மன், பச்சியப்பன், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், பச்சப்பட்டி பழனி, சாரதாதேவி, ம.தி.மு.க. மாநகர பொறுப்பாளர் ஆனந்தராஜ், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, விமலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 1,100 பேரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களில் 100 பேர் பெண்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் வாகனம் மற்றும் தனியார் பஸ்களில் ஏற்றி சேலம் 5 ரோடு அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு மண்டபம் திறக்கப்படாமல் பூட்டி கிடந்தது. அதைத்தொடர்ந்து வாகனத்தில் சென்றவர்கள் சேலம் 5 ரோட்டில் இறங்கி அங்கு மீண்டும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் காரணமாக 30 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் பெங்களூரு பைபாஸ் ரோட்டில் உள்ள மண்டபத்திற்கு தி.மு.க.வினர் கொண்டு செல்லப்பட்டனர்.

சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் சேலம் மத்திய மாவட்ட மாநகர செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் ஜி.கே.சுபாசு, தலைமை செயற்குழு உறுப்பினர் சூடாமணி மற்றும் நிர்வாகிகள் அமான் என்ற நாசர்கான், சையது, சபீர், அப்ரோஸ், அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி நிர்வாகி மெடிக்கல் பிரபு, கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 350 பேரை சேலம் டவுன் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர் பஸ் நிலையம் முன்பு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, செல்வகுமரன், ராஜா அய்யப்பன், ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், துணை அமைப்பாளர் மதிவாணன், மாணவரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், விவசாய அணி அமைப்பாளர் கருணாகரன், பொறியாளர் அணி ரமேஷ் உள்பட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 196 பேரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர். 3 இடங்களில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் 1,646 பேர் கைது செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்