டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-29 21:30 GMT
கடலூர்,

விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியாக மன்னம்பாடி, எடையூர் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் பெண்ணாடம் செல்லும் சாலை அமைந்துள்ளது. இதில் விளாங்காட்டூர்–மன்னம்பாடி இடையே உள்ள சாலையில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்த விளாங்காட்டூர் கிராம மக்கள் நேற்று காலை விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் விளாங்காட்டூர்–மன்னம்பாடி இடையே சாலையோரமுள்ள தனிநபர் ஒருவரது இடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கான கட்டுமான பணிகள் நடந்து முடிந்து, நாளை (புதன்கிழமை) டாஸ்மாக் கடையை திறப்பதாக தெரிய வருகிறது. அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்தால் 7 கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

அந்த கடைக்கு மது குடிக்க வருபவர்கள் போதை தலைக்கேறியதும், அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகளையும், பெண்களையும் கேலி கிண்டல் செய்யும் நிலை ஏற்படும். மேலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்