தமிழகத்தில் விரைவில் ஆட்சி கவிழும் - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தமிழகத்தில் விரைவில் ஆட்சி கவிழும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2018-01-29 23:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் பஜார் வீதியில் தே.மு.தி.க. மேற்கு மாவட்டம் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சேகர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் மக்களுக்காக இறங்கி போராடும் கட்சியாக தே.மு.தி.க. உள்ளது. பஸ் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சொன்னவுடன் ஆட்சியாளர்கள் பஸ் கட்டணத்தை குறைத்தது எங்களது பலத்தை காட்டுகிறது.

ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்தபோது அலங்காநல்லூரில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வரவேண்டும் என குரல் கொடுத்தது விஜயகாந்த்தான். கரும்பு விவசாயிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் கரும்பு ஆலைகள் முன்பு தே.மு.தி.க. முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் 2 நாட்களிலேயே கரும்புக்கான நிலுவைத்தொகை வழங்கப்படும் என ஆட்சியாளர்கள் அறிவித்தனர்.

பஸ் கட்டண உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆட்சி நிலையானது கிடையாது. விரைவில் கவிழும்.

2000-ம் ஆண்டு வரை லாபகரமாக இயங்கிய போக்குவரத்துதுறை தற்போது நஷ்டத்தில் இயங்க யார் காரணம்?. எந்த ஒரு தனியார் பஸ் முதலாளியும் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது என்று கூறவில்லை. பஸ் கட்டணத்தை முழுவதுமாக குறைக்கும் வரை தே.மு.தி.க. தொடர்ந்து போராடும்.

தே.மு.தி.க.விடம் ஆட்சியை கொடுத்தால் 2 ஆண்டுகளிலேயே அனைத்து துறையும் லாபகரமாக மாற்றுவோம். ஊழல் இல்லாத ஆட்சியை தருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்