சுற்றுச்சூழலை பாதிக்கும் புதிய தொழிற்சாலை அமைப்பதை கைவிட வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் புதிய தொழிற்சாலை அமைப்பதை கைவிட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

Update: 2018-01-29 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தேவயைான தண்ணீரை கடல் நீரை குடிநீராக்கி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். தூத்துக்குடியை சுற்றிள்ள பகுதிகளில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் மீண்டும் அனல்மின்நிலையம், உலோக தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலை, பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம், பெட்ரோலியம் கெமிக்கல் தொழிற்சாலை ஆகியவை அமைக்கப்பட்டால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்படும். ஆகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். அவருடைய ரசிகர்கள் தி.மு.க., காங்கிரசில் தான் அதிகம் உள்ளனர். அ.தி.மு.க.வில் யாரும் இல்லை. இதனால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரஜினி, கமல் ஆகியோர் முறையாக வரி செலுத்தாமல் அரசையும், மக்களையும் ஏமாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காததால் அரசியலுக்கு வந்து உள்ளனர் என்றார்.

ஸ்ரீவைகுண்டம் மேல மங்கலகுறிச்சி கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் 150 குடும்பங்கள் உள்ளன. தற்போது விவசாயத்துக்கு தேவையான மழையும் போதிய தண்ணீரும் இல்லாததால் நாங்கள் செங்கல் சூளையில் தொழில் செய்து வருகிறோம். எங்கள் ஊருக்கு அருகே உள்ள மாவடிபண்ணையை சேர்ந்த ஒருவர், எங்கள் ஊரில் உள்ள குடியிருப்பு நத்தம், அரசு புறம்போக்கு நிலம், ஊர் கோவில் நிலம் என பல இடங்களில் அரசு அனுமதியின்றி செங்கல் சூளைக்கு மணலை திருடி வருகிறார். இதுகுறித்து கேள்வி கேட்கும் ஊர் மக்களை மிரட்டுகிறார். அந்த நபர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்