அரசு பள்ளி வகுப்பறைகளுக்கு பூட்டு போட்ட மர்ம நபர்கள்

நெல்லை அருகே அரசு பெண்கள் பள்ளிக்கூட வகுப்பறைகளுக்கு மர்ம நபர்கள் பூட்டு போட்டனர். அந்த பூட்டை போலீசார் உடைத்து வகுப்பறைகளை திறந்து விட்டனர்.

Update: 2018-01-29 22:30 GMT
பேட்டை,

நெல்லை அருகே உள்ள கல்லூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், அதே வளாகத்தில் பெண்கள் உயர் நிலைப்பள்ளியும் உள்ளது. விடுமுறை முடிந்து நேற்று காலை மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வந்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடையச் செய்தது. மாணவிகளின் பள்ளிக்கூடத்தில் 3 வகுப்புறைகளின் கதவுகளும் பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது.

விடுமுறை காலத்தில் பள்ளிக்கூட வளாகத்துக்குள் புகுந்த யாரோ மர்ம நபர்கள் மாணவிகளின் வகுப்பறைகளுக்கு பூட்டு போட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியை மேரி முத்துமாரி சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அந்த பள்ளிக்கு விரைந்து வந்தனர். வகுப்பறைகளில் பூட்டப்பட்டு இருந்த பூட்டுகளை உடைத்து திறந்தனர். இதன்பிறகு மாணவிகள் வகுப்பறைகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் கல்லூர் பள்ளிக்கூட வளாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மர்ம நபர்கள் சிலர் இந்த பள்ளிக்கூட வளாகத்துக்குள் நுழைந்து விளையாடி வருகின்றனர். அப்போது மர்ம நபர்கள் யாரேனும் பூட்டு போட்டிருக்கலாம் என்றும் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக நேற்று போராட்டம் நடைபெற்றதையொட்டி, இவ்வாறு பூட்டு போடப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும், சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்