கன்றுக்குட்டியை சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது சரக்கு ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற தாய் பசு

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கன்றுக்குட்டியை சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது சரக்கு ஆட்டோவை தாய் பசு பின்தொடர்ந்து சென்றது.

Update: 2018-01-28 23:58 GMT

பெங்களூரு,

ஹாவேரியில் நடந்த பாசப்போராட்டம் பற்றிய விவரம் வருமாறு:–

ஹாவேரி(மாவட்டம்) டவுன் ஜே.பி. சதுக்கத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு பசுமாடும், அதன் கன்றுக்குட்டியும் அடிக்கடி சுற்றி திரிந்து வருகின்றது. இந்த பசுமாட்டுக்கும், கன்றுக்குட்டிக்கும் அந்த பகுதி மக்கள் உணவு கொடுத்து வருகின்றனர். இதனால், பசுவும், கன்றுக்குட்டியும் அந்த பகுதி மக்களிடம் பாசமாக பழகி வந்தன. மேலும், பசுமாடும் தனது கன்றை கண்ணும், கருத்துமாக பார்த்து கொண்டது.

இந்த நிலையில், எப்போதும் சுறுசுறுப்பாக சாலையில் சுற்றி திரியும் கன்றுக்குட்டி நேற்று சோர்வாக சாலையோரம் படுத்து கிடந்தது. அதன் அருகே தாய் பசுவும் சோகமாக இருந்தது. இதை பார்த்த சிலர் கன்றுக்குட்டியின் அருகே சென்று பார்த்தனர். அப்போது, கன்றுக்குட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அந்த கன்றுக்குட்டியை அவர்கள் ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு கால்நடை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தனது கன்றுக்குட்டியை சிகிச்சைக்கு அழைத்து செல்வது தெரியாமல், அந்த தாய் பசு அந்த சரக்கு ஆட்டோவை பின்தொடர்ந்து ஓடியது.

இதையடுத்து சுமார் ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அந்த கன்றுக்குட்டி அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனை வரை அந்த தாய் பசுவும் சரக்கு ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றது. அங்கு, கன்றுக்குட்டிக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். இந்த சிகிச்சையின்போதும் கன்றுக்குட்டியின் அருகேயே பசுமாடும் இருந்தது. சிகிச்சைக்கு பின்னர் தாய் பசு, தனது கன்றுக்குட்டியை பரிவுடன் தனது நாக்கால் நக்கி பாசத்தை வெளிபடுத்தியது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கன்றுக்குட்டியை ஏற்றி சென்ற சரக்கு ஆட்டோவை தாய் பசு பின்தொடர்ந்து சென்றதை அந்தப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். கன்றுக்குட்டி, தாய் பசு இடையிலான இந்த பாசப்போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று தனியார் கன்னட தொலைக்காட்சிகளில் வெளியாகின.

மேலும் செய்திகள்