கவிஞர் வைரமுத்துவுக்கு ரஜினி, கமல் ஆதரவு தெரிவிக்காதது ஏன்? திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கேள்வி

ஆண்டாளை பற்றி கருத்து கூறிய கவிஞர் வைரமுத்துவுக்கு ரஜினி, கமல் ஆதரவு தெரிவிக்காதது ஏன்? என்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-01-28 23:45 GMT
கம்பம்,

தேனி மாவட்டம் கம்பத்தில், நடந்த ஒரு திருமண விழாவில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

ஆண்டாள் பற்றி கூறிய கருத்துக்கு கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்து விட்டார். அதன்பிறகும், தூண்டி விடுவது நல்லதல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது, எல்லோரும் எழுந்து நிற்கையில், விஜயேந்திரர் தியானத்தில் இருந்தாராம். அவர் தியானத்தில் இருந்த போது, ஏன் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பினார்கள். திட்டமிட்டு தமிழை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இது தமிழர்கள் அத்தனை பேருக்கும் அவமானம்.

ஒரு மொழி அழிந்தால், இனம் அழிந்து போகும். பெங்களூரு மடத்தில் இளம்பெண்களை வைத்துக்கொண்டு ஒருவர் அவதூறாக பேசுகிறார். அதை எப்படி சட்டம் அனுமதிக்கிறது. வைரமுத்து, இளையராஜா எல்லோரும் இந்த மண்ணின் அடையாளம். வைரமுத்து தனிப்பட்ட ஆள் இல்லை. இந்த மண்ணோடும், மக்களோடும், இலக்கியத்தோடும் கலந் தவர்.

இலக்கியவாதிகள் ஒன்று சேர்த்து வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டதற்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அரசியலுக்கு வரும் நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் வைரமுத்துவுக்கு ஆதரவாக ஒரு வரியில் கூட பதில் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் பதில் சொல்லவில்லை?.

ரஜினிக்கு சிறப்பு சேர்த்தது வைரமுத்து எழுதி கொடுத்த பாடல்கள் தான். ஆனால் அவர் தட்டி கேட்காமல் இருக்கிறார். அவர் எப்படி இந்த மண்ணுக்கு விசுவாசமாக இருப்பார். ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வரட்டும். வந்த பின்பு பார்ப்போம். அரசியலை தீ என்று சொல்கிறோம். தீயிக்குள் விரலை விட்டு, சுட்ட பின்பு தான் தெரியும். அது தீ என்று.

ரொம்ப பேர் சுட்டு விட்டது என அரசியலை விட்டு சென்று விட்டனர். பழம்பெரும் நடிகர் சிவாஜிகணேசனே தனது சொந்த தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார். இது அனைவருக்கும் தெரியும். காமராஜரோடு நல்ல அரசியல் முடிந்து விட்டது. அதன் பின் அரசியலில் கறை பிடித்து விட்டது. கட்சியை காப்பாற்ற கைநீட்டித்தான் ஆகவேண்டும். அப்படி சாணக்கியத் தன்மை இருந்து வெற்றிபெற்றால் நல்லது. சம்பந்தமில்லாமல் மாட்டிக்கொண்டால் வம்பு.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்