பா.ஜ.க.வும் திராவிட கட்சிதான் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

பா.ஜ.க.வும் திராவிட கட்சிதான் என்று ஈரோட்டில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-01-28 23:30 GMT
ஈரோடு,

பா.ஜ.க. விவசாய அணி சார்பில் சிறப்பு யாகம் ஈரோடு அருகே பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. இந்த யாகத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அ.தி.மு.க., தி.மு.க.வை மட்டும் திராவிட கட்சிகள் என்று கூறிவிட முடியாது. இந்த 2 கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து தமிழகத்திற்கு எந்தவொரு முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை. திராவிடம் என்பது தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்தது. அந்த மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக பா.ஜ.க. பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே பா.ஜ.க.வும் திராவிட கட்சிதான்.

ஆண்டாள் பிரச்சினையை மறைப்பதற்காகவே விஜயேந்திரர் குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது. தமிழ் மொழிக்கு அனைவரும் மரியாதை கொடுக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். தமிழக அரசு பஸ் கட்டணத்தை குறைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நடிகர்கள் அரசியலுக்கு வருவது கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வரும் நாடகம்.

தமிழக மீனவர்கள் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மீனவர்களுக்காக ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தீர்க்க இந்தியா, இலங்கை மந்திரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு மூலம் சில ஆண்டுகளில் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

மேலும் செய்திகள்