அ.தி.மு.க. அரசு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது - ஆர்.பி.உதயகுமார் பேச்சு

அ.தி.மு.க. அரசு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

Update: 2018-01-28 23:31 GMT
வாடிப்பட்டி,

வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை எம்.ஜி.ஆர்.திடலில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் மாணிக்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி, பேரூர் செயலாளர் பாப்புரெட்டி, நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா, காளிதாஸ், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- உலகத்திலேயே தாய் மொழிக்காக உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த தகுதியுள்ள ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். ஜெயலலிதா வழியில் அஞ்சலி செலுத்துகிறோம். மொழியை காக்க உயிர்நீத்த ஒரேநாடு அன்னை தமிழகம் என்ற வரலாற்றை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

பெரியாரில் தொடங்கி அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரை அவர்களின் வழியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிவருகிறது. ஜெயலலிதா பிறந்தநாளன்று ஒரு லட்சம் மகளிர் இருசக்கர வாகனம் ஓட்டி வர இருக்கிறார்கள். எதிர்கட்சிகள் எத்தனையோ வேதனை, சோதனைகளை தந்தாலும் அனைத்தையும் முறியடிப்போம்.

மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யபாடுபடுவோம். இவ்வாறு அவர்பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் திருப்பத்தூர் மணியரசு, பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏக்கள் முத்துராமலிங்கம், தமிழரசன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் வழக்கறிஞர் கார்த்திக் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்