விருதுநகர் அருகே கார் விபத்தில் தந்தை-மகன் பலி, டிரைவர் படுகாயம்

விருதுநகர் அருகே கார் விபத்திற்குள்ளானதில் தந்தையும், மகனும் பலியானார்கள். டிரைவர் படுகாயமடைந்தார்.

Update: 2018-01-28 21:45 GMT
விருதுநகர்,

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் இந்திராநகரைச் சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 60). போட்டோ ஸ்டுடியோ நடத்திவந்தார். இவரது மகன் பிரேம் அருண்பிரசாத்(30). இவர் சென்னையில் வசித்து வந்தார். சமீபத்தில் கடையநல்லூருக்கு வந்த இவர் புதிதாக கார் வாங்கினார். அந்த காரில் அவரது தந்தை தியாகராஜனுடன் சென்னைக்கு புறப்பட்டார். காரை கடையநல்லூரைச் சேர்ந்த ராஜா(34) என்பவர் ஓட்டி சென்றார். இந்த கார் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் விலக்கு என்ற பகுதியில் வந்தபோது விபத்திற்குள்ளானது. ஆனால் அந்த கார் எப்படி விபத்தில் சிக்கியது என்பது தெரியவில்லை.

இந்த விபத்தில் தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகன் பிரேம் அருண் பிரசாத் மற்றும் டிரைவர் ராஜா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூலக்கரை போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பிரேம் அருண் பிரசாத் இறந்துபோனார். டிரைவர் ராஜா விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேகமாக வந்த கார் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியிருக்கலாம் என்றும், கார் மோதிய லாரியை அதன் டிரைவர் அங்கிருந்து விபத்து நடந்த உடன் ஓட்டிச் சென்றிருக்கலாம் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்